search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உழவர்கரை தொகுதி ரெட்டியார்பாளையத்தில் நாரயாணசாமி வாக்கு சேகரித்த போது எடுத்த படம்.
    X
    உழவர்கரை தொகுதி ரெட்டியார்பாளையத்தில் நாரயாணசாமி வாக்கு சேகரித்த போது எடுத்த படம்.

    பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரியை தமிழகத்தோடு இணைத்து விடுவார்கள்- நாராயணசாமி சொல்கிறார்

    புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரியை தமிழகத்தோடு இணைத்து விடுவார்கள் என நாராயணசாமி தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளில் வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    அதன்படி புதுச்சேரி உழவர்கரை, வில்லியனூர், மங்கலம் ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று மாலை திறந்த வேனில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் செய்யப்பட்டுள்ளன. புதிய பாலம், புதிய கட்டிடங்கள் என கட்டுமானம், சாலை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் 20 கிலோ அரிசி வழங்கப்படும் என அறிவித்தோம்.

    அதன்படி பொதுமக்களுக்கு அரிசி வினியோகம் செய்யப்பட்டது. இதனை அப்போது கவர்னராக இருந்த கிரண்பெடி தடுத்தார். அவர், மில்களையும், தொழிற்சாலைகளையும், அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் முடக்கினார்.

    கொரோனா பரவல் காரணமாக அனைவரும் வேலைவாய்ப்பின்றி அவதிப்பட்டனர். புதுவை அரசு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம், கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணமாக வழங்கியது. முதியோர், விதவைகள் உதவித்தொகை காலத்தோடு வழங்கப்பட்டது. கொரோனா பரவலின்போது எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் யாராவது பொதுமக்களை சந்தித்தார்களா?

    சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரியை தமிழகத்தோடு இணைத்து விடுவார்கள். புதுவை தனித்தன்மையை இழந்து விடும். மாநில அந்தஸ்து, நிதி கிடைக்காது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மக்கள் பெரும் அவதிப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×