search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரேமலதா விஜயகாந்த்
    X
    பிரேமலதா விஜயகாந்த்

    பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று இல்லை

    விருத்தாசலம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளராக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளராக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இவர் கடந்த 19-ந் தேதி தனது தம்பி சுதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    அன்று மாலை சுதீசுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே சுதீஷ் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தன்னை பரிசோதித்து கொண்டார்.

    இதற்கிடையில் வேட்பு மனு தாக்கல் செய்த போது இருந்த அதிகாரிகள், வேட்பாளர் பிரேமலதா ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என பரபரப்பாக பேசப்பட்டது.

    இதனை தொடர்ந்து வேட்புமனு தாக்கலின் போது பணியில் இருந்த தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

    நேற்று காலை விருத்தாசலம் ஷெராமிக் தொழிற்பேட்டையில் பிரேமலதா வாக்கு சேகரித்தார். அப்போது சுகாதாரத்துறை ஆய்வாளர் ராஜா தலைமையிலான மருத்துவ குழுவினர் அங்கு வந்தனர்.

    அவர்கள் வேட்பாளர் பிரேமலதாவிடம் உங்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டும் என்றனர். இதற்கு தே.மு.தி.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது பிரேமலதா குறுக்கிட்டு, உணவு இடைவேளையின்போது கொரோனா பரிசோதனைக்கு வருகிறேன் என்றார். இதைத்தொடர்ந்து சுகாதார துறையினர் அங்கிருந்து சென்றனர்.

    நேற்று மதியம் 2.30 மணியளவில் பிரேமலதா தனக்கு கொரோனா பரிசோதனை எடுத்துக் கொண்டார். இதன் மாதிரி கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஆய்வகத்தில் பிரேமலதாவின் சளி, உமிழ்நீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனை முடிவில் பிரேமலதாவுக்கு கொரோனா இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த தகவலை கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் செந்தில் தெரிவித்துள்ளார்.

    இதனையறிந்த தே.மு.தி.க.வினர் உற்சாகம் அடைந்தனர்.
    Next Story
    ×