search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் நாராயணசாமி
    X
    முதல்வர் நாராயணசாமி

    பாஜகவுக்கு செல்பவர்களின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடும்-முதல்வர் நாராயணசாமி

    புதுச்சேரியில் பா.ஜ.க.வுக்கு செல்பவர்களின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடும் என்று முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உள்ள சேத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு மறைந்த எம்.எல்.ஏ.வும், முன்னாள் மேயருமான சவுந்தரரங்கன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் பெயர்ப் பலகை திறப்பு விழா நேற்று  நடைபெற்றது.

    விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு, பெயர்ப் பலகையை திறந்து வைத்தார். இதில் அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ், முதன்மை கல்வி அதிகாரி அல்லி, துணை இயக்குனர் கோவிந்தராஜன் மற்றும் சவுந்தரரங்கனின் குடும்பத்தினர், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    முன்னதாக, திரு-பட்டினம் காந்தி மார்க்கெட் வளாகத்தில் வைத்திலிங்கம் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.18 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பணியை நாராயணசாமி தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் சமுதாயக்கூடம் உள்ளிட்ட புதிய கட்டிடங்களை நாராயணசாமி திறந்து வைத்தார். 

    விழாவின்போது முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    புதுச்சேரியில் கடந்த 4½ ஆண்டுகளாக காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளில் 85 சதவீதம் நிறைவேற்றியுள்ளது. கடும் நிதி நெருக்கடியில் மக்கள் பணியை செம்மையாக செய்து வருகிறோம்.

    புதுச்சேரிக்கு கொரோனா தடுப்பூசி மத்திய அரசு கொடுத்தால் மக்களுக்கு செலுத்த தயாராக உள்ளோம். இல்லாவிட்டால் மாநில அரசு மூலம் இலவசமாக மக்களுக்கு செலுத்துவதற்கான நடவடிக்கையை எடுப்போம்.

    புதுச்சேரி ஆட்சியில் யார் எப்படி செயல்பட்டார்கள் என்பதை மக்கள் அறிவார்கள். முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட 10 பேர் மட்டுமே காங்கிரஸ் கட்சியை விட்டு சென்றுள்ளனர். அதற்காக அவர்கள் சொல்லும் காரணம் ஏற்புடையதல்ல. 

    நமச்சிவாயம் மட்டுமல்ல, எந்த அமைச்சர் பணியிலும் நான் தலையிட்டது கிடையாது. கட்சியில் இருந்தவரை கவர்னரை எதிர்த்துவிட்டு, தற்போது, கவர்னருடன் இணக்கமாக சென்றிருக்க வேண்டும் என கூறுவதை ஏற்க முடியாது. 

    இன்னும் சொல்லப்போனால், கவர்னர் நடவடிக்கைகளை கண்டித்து அவரே பல போராட்டங்கள் நடத்தியுள்ளார். மேடைகளில் பேசியுள்ளார். கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் தற்போது, கட்சியை விட்டு வெளியில் செல்லவேண்டும் என்பதற்காக ஏதேதோ காரணங்களை கூறி வருகிறார்.

    புதுச்சேரியில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி இப்போதும் உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து, கட்சி தலைவர்கள் உரிய முடிவு எடுப்பார்கள். அதன்படி நாங்கள் செயல்படுவோம். முக்கியமாக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் யாரும் இனி கட்சியிலிருந்து விலக மாட்டார்கள். புதுச்சேரியில் யார் பா.ஜ.க.விற்கு சென்றாலும், அவர்கள் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடும் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×