என் மலர்
செய்திகள்

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தூய்மைப் பணியாளருக்கு பாதிப்பா?
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தூய்மைப் பணியாளருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக வெளியான தகவல் தவறானது என ஸ்டான்லி அரசு மருத்துவமனை டீன் டாக்டர் பாலாஜி தெரிவித்தார்.
சென்னை:
தமிழகத்தில் கடந்த 16-ந் தேதி முதல் சுகாதாரப் பணியாளர்கள், கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகள், டாக்டர்கள், செவிலியர்கள் என பலரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பெண் தூய்மை பணியாளர் ஒருவர், உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் பாதிப்பு ஏற்பட்டது என சமூக வலைதளங்களில் நேற்று தகவல் பரவியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து ஸ்டான்லி மருத்துவமனை ‘டீன்' டாக்டர் பாலாஜி கூறியதாவது:-
கொரோனா தடுப்பூசி செலுத்தியபின்பு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணை பரிசோதித்தோம். அவருக்கு எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படவில்லை. இருந்தாலும் அவர் டாக்டர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். தடுப்பூசி போட்டுக்கொண்ட அந்தப் பெண்ணுக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளது என்றும், 10-க்கும் மேற்பட்டோர் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சமூக வலைதளங்களில் பரவிய தகவல் பொய்யானது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அந்த பெண், மருத்துவமனையில் நலமுடன் இருப்பதற்கான வீடியோ ஆதாரங்களையும் அவர் வெளியிட்டார்.
Next Story