search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் பள்ளிகளை திறப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தபோது எடுத்த படம்.
    X
    கடலூரில் பள்ளிகளை திறப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தபோது எடுத்த படம்.

    நோய் அறிகுறி இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்- கலெக்டர் அறிவுரை

    நோய் அறிகுறி இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி அறிவுறுத்தியுள்ளார்.
    கடலூர்:

    10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என்றும், பள்ளிகள் திறக்கப்படும் போது அதற்கான அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.

    அதன் அடிப்படையில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார்.

    பின்னர் அவர் கூறுகையில், பள்ளிகளில் ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களை மட்டுமே அமரவைக்க வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எப்போதும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். வகுப்பறையில் ஒவ்வொரு மாணவருக்கும் இடையே 6 அடி இடைவெளி இருக்கவேண்டும். மாணவர்களுக்கு நோய் அறிகுறி இருந்தால் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

    மாற்றுத்திறனாளி மாணவர்கள் பள்ளிக்கு வருவதை கட்டாயப்படுத்தக் கூடாது. அவர்களுக்கு இணையவழி மூலம் வகுப்புகள் நடத்தப்படவேண்டும். சத்துணவு சாப்பிடாத மாணவர்கள், வீட்டிலிருந்து உணவு எடுத்துவர வேண்டும். பள்ளியின் வழிகாட்டு நெறிமுறைகளை பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கடைபிடிப்பதை உறுதி செய்ய தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் கண்காணிக்க வேண்டும். விடுதியில் உள்ள ஊழியர்கள் அனைவரும் உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.

    பள்ளிகளில் மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் போன்றவை நடத்துவதை தவிர்க்க வேண்டும். மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தே தண்ணீர் பாட்டில் எடுத்து வரவேண்டும். அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

    குடிநீர், உணவு போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது. கை குலுக்குதல், தொட்டு பேசுதல் உள்ளிட்டவற்றை தவிர்த்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றார். கூட்டத்தில் அனைத்து பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×