search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெற்றோர் பதிவு செய்த கருத்துகளை ஒரு பெட்டியில் சேகரித்தபோது எடுத்த படம்
    X
    பெற்றோர் பதிவு செய்த கருத்துகளை ஒரு பெட்டியில் சேகரித்தபோது எடுத்த படம்

    தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறப்பு?- 2ம் நாள் கருத்துக்கேட்பு

    தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பது பற்றி 2வது நாளாக பெற்றோரிடம் கருத்துக்கேட்கப்பட்டு வருகிறது.
    சென்னை:

    கொரோனா நோய்த் தொற்றால் பள்ளிகள் கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் 3-வது வாரத்தில் இருந்து மூடப்பட்டு இருக்கின்றன. நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, வீடியோ பகிர்வு மூலம் தொடங்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    நோய்த்தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததை தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சில வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க கருத்துகள் கேட்கப்பட்ட நிலையில், பெரும்பாலான பெற்றோர் திறக்க வேண்டாம் என்று கூறியதையும், மாணவர்களின் நலனையும் அரசு கவனத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பதற்கான முடிவை மாற்றிக்கொண்டது.

    இந்த நிலையில் 2020-21-ம் கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை நடத்தலாமா? என்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

    அதற்கு முன்னோட்டமாக பொங்கல் விடுமுறைக்கு பிறகு 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளை திறக்கலாமா? வேண்டாமா? என்று அந்தந்த மாணவர்களின் பெற்றோரிடம் கருத்துகள் கேட்க அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் கடந்த 4-ந்தேதி வெளியிட்டது. அதன்படி, 8-ந் தேதிக்குள் (நாளை) கருத்துகளை கேட்டு சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அதற்கேற்றாற்போல், சம்பந்தப்பட்ட பள்ளிகள் 10, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோரை அழைத்து கருத்துகளை கேட்கத் தொடங்கி இருக்கின்றனர்.

    அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 5 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் உயர்நிலை பள்ளிகள், 7 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் நேற்று முதல் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன.

    ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு விதமாக கருத்துகள் கேட்டு பெறப்படுகின்றன. சில பள்ளிகளில் வெள்ளைத்தாள் வழங்கப்பட்டு அவர்களுடைய கருத்துகளை எழுத்துப்பூர்வமாக வாங்குகின்றனர். அதில் அவர்கள் பள்ளிகளை திறக்கலாமா? வேண்டாமா? என்பதையும், வேண்டாம் என்றால் அதற்கான காரணத்தையும் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகின்றனர். சில பள்ளிகளில் முழு மனதுடன் பள்ளிகளை திறக்க சம்மதமா? வேண்டாமா? என்பதை ‘டிக்' செய்தால் போதும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    கருத்துகளை பதிவிடும் பெற்றோர் தங்களுடைய பெயர், பிள்ளைகளின் பெயர், வகுப்பு, செல்போன் எண், முகவரியை கண்டிப்பாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டனர்.

    கொரோனா நோய்த்தொற்றை கருத்தில் கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் இன்றும் கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பெற்றோர் முக கவசம் அணிந்தபடி, சமூக இடைவெளியுடன் கருத்துகளை பதிவு செய்துவிட்டு திரும்பிச் சென்றனர்.

    சில தனியார் பள்ளிகள் நேரடியாக பெற்றோரை அழைக்காமல் மின்னஞ்சல் வாயிலாகவும், வாட்ஸ்-அப் வாயிலாகவும் கருத்துகளை பெற்றனர். நேற்றும், இன்றும் பெறப்படும் கருத்துகளை அந்தந்த பள்ளிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.

    அவர்கள் அதனை பார்த்து, எவ்வளவு பேர் பள்ளிகளை திறக்க ஆதரவு, எதிர்ப்பு தெரிவித்தனர்? என்பதை குறிப்பிட்டு பள்ளிக்கல்வி இயக்ககத்திடம் நாளை (வெள்ளிக்கிழமை) சமர்ப்பிக்க இருக்கின்றனர்.


    Next Story
    ×