search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப சிதம்பரம்
    X
    ப சிதம்பரம்

    மத்திய அரசு தனது பிடிவாத குணத்தை மாற்றவில்லை: ப.சிதம்பரம்

    விவசாயிகள் விஷயத்தில் மத்திய அரசு தனது பிடிவாத குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்று புதுக்கோட்டையில் ப.சிதம்பரம் கூறினார்.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டையில் முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யுமான ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைப்பதன் மூலம் தி.மு.க. கூட்டணியின் வெற்றி உறுதியாகி விட்டது. டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர். இருந்தாலும், மத்திய அரசு தனது பிடிவாத குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. குளறுபடி உள்பட எந்த விஷயத்திலும் அரசு தனது பிடிவாதத்தை தளர்த்திகொள்வது கிடையாது. இந்த அரசுக்கு மக்கள் சொல்வது ஒரு பொருட்டில்லை. நாடாளுமன்றமும், நாடாளுமன்ற விவாதங்களும், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு கேட்டாலும் பொருட்டில்லை. பா.ஜ.க. எந்திரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    இந்தியாவில் தற்போதைய பொருளாதார நிலையில் ஏற்றுமதி மீண்டும் குறைந்திருக்கிறது. நகர்ப்புற வேலையின்மை 9.1 சதவீதம் உயர்ந்திருக்கிறது. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் டிசம்பர் மாதத்தில் 2 கோடி மக்களுக்கு வீட்டில் உலை வைக்க பயன்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டம் தான் பல மாநிலங்களில் ஏழை மக்களை காப்பாற்றுகிறது.

    அ.தி.மு.க. கூட்டணியில் முதல்-அமைச்சர் வேட்பாளரை பா.ஜ.க. தான் அறிவிக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் கூறியிருப்பது நகைப்புக்குரியது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை போல வருகிற சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க.கூட்டணி வெற்றி பெறும். தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக எந்த பிரச்சினையும் வராது என்பது எனது கருத்து. கோவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மக்களை சந்தித்த போது சர்ச்சையை செயற்கையாக உருவாக்கியிருக்கிறார்கள்" என்றார்.
    Next Story
    ×