search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது எடுத்த படம்.
    X
    விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது எடுத்த படம்.

    அதிமுக அரசு, விவசாயிகளுக்கு பெரும் துரோகம் இழைத்து விட்டது- உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

    வேளாண் திருத்த சட்டங்களை ஆதரித்து அ.தி.மு.க. அரசு, விவசாயிகளுக்கு பெரும் துரோகம் இழைத்து விட்டது என்று தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
    ஒரத்தநாடு:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் நாகை, தஞ்சை மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் நிவர் புயல் காரணமாக தனது சுற்றுப்பயணத்தை ஒத்தி வைத்து விட்டு சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

    அவர் சென்னை செல்லும்போது திட்டமிட்டபடி மீண்டும் 28-ந் தேதி முதல் தனது தேர்தல் பிரசார பயணத்தை தொடருவேன் என்று கூறிவிட்டு சென்றார். அதன்படி நேற்று அவர் மீண்டும் தஞ்சை மாவட்டத்தில் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த உதயநிதி ஸ்டாலின், திருச்சியில் இருந்து கார் மூலம் தஞ்சைக்கு நேற்று மதியம் 2 மணி அளவில் வந்து சேர்ந்தார். தஞ்சை சங்கம் ஓட்டலில் ஓய்வெடுத்தார்.

    மாலை 4 மணி அளவில் தஞ்சை சங்கம் ஓட்டலில் இருந்து புறப்பட்டு ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமாநாட்டிற்கு சென்றார். அங்கு நடந்த விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

    இதில் பங்கேற்ற விவசாயிகள், விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும். கரும்புக்கான நிலுவை தொகையினை வழங்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் உள்ளிட்ட பொருட்களுக்கான விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    இந்த கூட்டத்தில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    கடந்த 20-ந் தேதி முதல் நான் மக்களை சந்தித்து வருகிறேன். செல்லும் இடமெல்லாம் மக்கள் எழுச்சியுடன் கூடுகின்றனர். இதனால் நான் மக்களை சந்திக்கக்கூடாது என்பதற்காக போலீசார் என்னை தினந்தோறும் கைது செய்து தடையை ஏற்படுத்துகின்றனர். இந்த தடைகளை தகர்த்தெறிந்து நான் தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறேன். மக்களின் கோரிக்கைகள் எங்களது தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்.

    கொரோனா காலத்திலும் விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் திருத்த சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசுக்கு அடிபணிந்து தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க அரசு, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திருத்த சட்டங்களை ஆதரித்து விவசாயிகளுக்கு பெரும் துரோகம் இழைத்து விட்டது.

    தி.மு.க. ஆட்சி செய்த காலங்களில் விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவசாயிகளின் நலன் காக்கும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தினோம். கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை ஆதரித்து வெற்றி பெற வைத்தது போன்று வருகிற 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைய மக்கள் ஆதரவளிக்க வேண்டும். அமைய உள்ள தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×