என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வேல் யாத்திரைக்கு தடை விதித்ததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 204 பேர் கைது

    வேல் யாத்திரைக்கு தடை விதித்ததை கண்டித்து ஊட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 204 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஊட்டி:

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து பாரதீய ஜனதா கட்சி சார்பில் வேல் யாத்திரை நேற்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த யாத்திரை முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் உள்ள நகரங்கள் வழியாக செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் திருத்தணியில் தடையை மீறி வேல் யாத்திரை தொடங்கியபோது போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பா.ஜ.க. மாநில தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து நீலகிரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஊட்டி ஏ.டி.சி திடலில் சாலை மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது.

    இதற்காக நிர்வாகிகள் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அத்துடன் ஊட்டியில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் மற்றும் கார்கள், லாரிகளை மறித்து போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு நீலகிரி மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார்.

    இதில் ஊட்டி, குன்னூர், மஞ்சூர் நிர்வாகிகள் கலந்துகொண்டு தமிழகத்தில் பா.ஜ.க.வினரின் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும். மேலும் தமிழக பா.ஜ.க. தலைவரை கைது செய்ததை கண்டிக்கிறோம் என்று கோஷங்கள் எழுப்பினர். சாலை மறியல் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    பின்னர் ஊட்டி நகர போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட பா.ஜ.க.வினர் 204 பேரை கைது செய்து பஸ்களில் ஏற்றி தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
    Next Story
    ×