என் மலர்
செய்திகள்

சட்டமன்ற தேர்தலுக்கு பா.ஜனதா தயார்- மாநில தலைவர் முருகன் பேச்சு
கவுண்டம்பாளையம்:
கோவை கவுண்டம்பாளையத்தில் கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த சட்டமன்ற தேர்தலில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் இடத்தில் பா.ஜனதா இருந்தது. இந்த முறை பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் எம்.எல்.ஏ.க்களாகவும், அமைச்சர்களாகவும் சட்டசபைக்கு செல்வார்கள்.
மும்மொழி கல்வி கொள்கையை அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும். தமிழ், ஆங்கிலம் தவிர 3-வது ஒரு மொழியை கற்று கொள்வதில் தவறு இல்லை.
புதிய கல்வி கொள்கை தாய் மொழி கல்வியும், தொழில் கல்வியையும் ஊக்குவிக்கின்றது. தமிழகத்தில் சி.பி.எஸ்.இ., மெட்ரிக் பள்ளிகளில் ஏற்கனவே மும்மொழி கல்வி இருக்கின்றது. அரசு பள்ளிகளில் மட்டும் தான் மும்மொழி கல்வி இல்லை. இதனால் ஏழை, எளிய மாணவர்களுக்கு இன்னொரு மொழி படிக்கும் வாய்ப்பு இல்லாமல் போகின்றது. கிஷான் திட்டம் விவசாயிகள் பயன் பெறும் திட்டம்.
ஆனால் அதில் விவசாயிகள் அல்லாத பலர் முறைகேடு செய்திருப்பது தெரியவந்துள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரிக்க தமிழக அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும். நாங்கள் வருகிற சட்டமன்ற தேர்தலுக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைதேர்தலுக்கும் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து பா.ஜனதா மாநில தலைவர் முருகன் முன்னிலையில் பல்வேறு கட்சியினர் பா.ஜனதாவில் இணைந்தனர். தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பிரதமரின் படம் வைக்க வேண்டும், ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
கோவையிலுள்ள குளம், குட்டைகளை கழிவுநீர் கலக்காமல் தூய்மைபடுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில செயலாளர் செல்வகுமார், மாநில துணைத்தலைவர் வானதி சீனிவாசன், மாவட்ட தலைவர் நந்தகுமார் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.