என் மலர்tooltip icon

    செய்திகள்

    யூசுப் ரகுமான்
    X
    யூசுப் ரகுமான்

    கோழிக்கடைக்காரர் கொலை- போலீசில் சரணடைந்த அண்ணன் மகன்கள் வாக்குமூலம்

    பணம் தராமல் ஏமாற்றியதால் சித்தப்பா தலையை துண்டித்தோம் என்று போலீசில் சரணடைந்த அண்ணன் மகன்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
    காரைக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்தைச் சேர்ந்தவர் செய்யது முகமது. இவரது மகன்கள் சகுபர் அலி, யூசுப் ரகுமான் (வயது50). இவர்களுக்கு அங்கு பல கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன.

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு யூசுப் ரகுமான் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயலில் கோழிக்கடை தொடங்கி அங்கேயே குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருடன் தந்தை செய்யது முகமதுவும் தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் கோட்டைப்பட்டினத்தில் உள்ள சொத்து தொடர்பாக யூசுப் ரகுமானுக்கும், அவரது அண்ணன் சகுபர் அலிக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் அடிக்கடி இருவருக்குள் மோதல் ஏற்பட்டு அடிதடி வரை சென்றுள்ளது.

    இதற்கிடையில் பொது சொத்துக்களை யூசுப் ரகுமான் விற்றுள்ளார். இது சகுபர் அலி மற்றும் அவரது மகன்கள் ரியாஸ்கான், ரகுமான்கான் ஆகியோருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இதுபற்றி யூசுப் ரகுமானிடம் கேட்டனர். ஆனால் அவர் சரியான பதிலை தரவில்லை. இதனால் அவர்களது கோபம் மேலும் அதிகரித்தது.

    நேற்று இரவு சகோதரர்கள் ரியாஸ்கான், ரகுமான் கான் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சித்தப்பா யூசுப் ரகுமான் வீட்டுக்கு வந்தனர்.

    சொத்து தொடர்பாக அவர்கள் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சகோதரர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சித்தப்பா என்றும் பார்க்காமல் யூசுப் ரகுமானை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சாய்ந்தார். இருப்பினும் சகோதரர்கள் ரியாஸ்கான், ரகுமான்கானுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. யூசுப் ரகுமானின் தலையை தனியாக துண்டித்து எடுத்தனர்.

    பின்னர் 2 பேரும் துண்டித்த தலையை பையில் வைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அலறினர். அவர்களை அரிவாளை காட்டி மிரட்டிய சகோதரர்கள் நேராக சாக்கோட்டை போலீஸ் நிலையம் சென்று துண்டித்த தலையுடன் சரணடைந்தனர்.

    போலீஸ் நிலையத்திற்கு தலையுடன் 2 பேர் வந்ததால் அங்கும் பதட்டம் ஏற்பட்டது. காரைக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அருண் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

    அப்போது கொலையாளிகள் ரியாஸ்கான், ரகுமான் கான் ஆகியோர் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தில் எங்களுக்கு குடும்ப சொத்து உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பிலான இந்த சொத்துக்களை சித்தப்பா யூசுப் ரகுமான் தனது வீட்டில் இருந்த தாத்தா செய்யது முகமதுவை ஏமாற்றி மோசடியாக தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார். இதுதொடர்பாக அவரிடம் பலமுறை கேட்டும் சரியான பதில் அளிக்கவில்லை.

    மேலும் அதில் சில சொத்துக்களை தன்னிச்சையாக விற்று விட்டார். இதில் எங்களுக்குரிய பணத்தை தாருங்கள் என கேட்டபோது பணம் தராமல் இழுத்தடித்தார். நேற்றும் அவரிடம் பங்கு தொகை பணம் கேட்டோம். ஆனால் அவர் சரியான பதிலை கூறவில்லை. இதனால் ஆத்திரம் ஏற்பட்டது. இனியும் சித்தப்பா பணம் தர மாட்டார் என கருதியதால் அவரை வெட்டிக்கொலை செய்தோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கொலை செய்யப்பட்ட யூசுப் ரகுமானுக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர்.

    Next Story
    ×