search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட 2 பேர் (முக மூடி அணிந்திருப்பவர்கள்)
    X
    கள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட 2 பேர் (முக மூடி அணிந்திருப்பவர்கள்)

    கள்ளநோட்டு கும்பலை சேர்ந்த மேலும் 2 பேர் கைது

    நம்பியூர் பகுதியில் கள்ளநோட்டு கும்பலை சேர்ந்த மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கம்யூட்டர் மற்றும் அச்சு எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூரை அடுத்த குருமந்தூர் அருகே உள்ள ஆயிபாளையத்தை சேர்ந்தவர் சிவபிரகாஷ். இவர் அந்த பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு கடந்த 23-ந் தேதி 2 பேர் மோட்டார்சைக்கிளில் வந்து உள்ளனர். பின்னர் அவர்கள் 2 பேரும் சிவப்பிரகாசிடம் ரூ.500 கொடுத்து பூண்டு வாங்கினர். ஆனால் 500 ரூபாய் நோட்டை பெற்ற சிவப்பிரகாசுக்கு, அந்த 2 பேரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.

    உடனே அவர் அந்த நோட்டை உற்று கவனித்தபோது அது கள்ளநோட்டு என தெரியவந்தது.

    உடனே அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிவபிரகாஷ் பிடித்து நம்பியூர் போலீசில் ஒப்படைத்தார். பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், ‘அவர்கள் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பல்லக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த பிரபு (வயது 28), பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை சேர்ந்த அழகுதுரை (34) என்பது தெரிய வந்தது. இதில் பிரபு ஓட்டல் உரிமையாளராக உள்ளார்.

    திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் அழகுதுரை தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்து உள்ளார். இவர்கள் 2 பேரும் சேர்ந்து நம்பியூர் பகுதியில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பிரபு மற்றும் அழகுதுரையை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் 12-ம் பறிமுதல் செய்ததும் தெரிந்ததே.

    அதுமட்டுமின்றி கைது செய்யப்பட்ட 2 பேரிடம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விடும் கும்பல் குறித்து திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் நம்பியூர் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் ராஜமாணிக்கம், மோகன்ராஜ், சாம்சிங் (தனிப்பிரிவு) மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் கள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்டதாக அந்த கும்பலை சேர்ந்த மேலும் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் விசாரணையில், ‘அவர்கள் திருப்பூர் மாவட்டம் பூலுவப்பட்டி நேருநகரை சேர்ந்த கன்னியப்பன் (34), ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள மன்னாதன் குருமனூர்காடு பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் (38) என்பதும்,’ தெரியவந்தது.

    மேலும் அவர்கள் பூலுவப்பட்டி பாலன் நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அந்த வீட்டில் கள்ள நோட்டுகள் அச்சடித்து அங்கிருந்து நம்பியூர், கோபி, சத்தியமங்கலம், திருப்பூர், அவினாசி, அந்தியூர், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய பகுதிகளில் புழக்கத்தில் விட்ட திடுக்கிடும் தகவலையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து கன்னியப்பன், பாக்கியராஜ் ஆகியோரை கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட அச்சு எந்திரங்கள், கம்ப்யூட்டர், மடிக்கணினி, மோட்டார்சைக்கிள் மற்றும் ரூ.56 ஆயிரம் மதிப்பிலான 112 கள்ளநோட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

    கள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட கும்பலை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் நம்பியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×