search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது

    நம்பியூர் அருகே கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நம்பியூர்:

    நம்பியூர் அருகே குருமந்தூரில் உள்ள ஒரு காய்கறி கடைக்கு 2 பேர் வந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிவிட்டு அதற்குண்டான பணத்துக்கு 500 ரூபாய் நோட்டு ஒன்றினை கொடுத்தனர். அவர்கள் கொடுத்த நோட்டில் கடைக்காரருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனால் அந்த கடைக்காரர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் 2 பேரையும் பிடித்து நம்பியூர் போலீசில் ஒப்படைத்தார். பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், ‘அவர்கள் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள பல்லக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த தனவேல் என்பவரின் மகன் பிரபு (வயது 28), பெரம்பலூரை சேர்ந்த செல்லமுத்து என்பவரின் மகன் அழகுதுரை (34) ஆவர். இதில் பிரபு ஓட்டல் உரிமையாளர் ஆவார். திருப்பூர் பூலுவப்பட்டியில் உள்ள பனியன் கம்பெனியில் தையல் தொழிலாளியாக அழகுதுரை வேலை செய்து வருகிறார். இவர்கள் 2 பேரும் சேர்ந்து தங்களிடம் இருந்த கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டது,’ தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 500 ரூபாய் 11 கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் 2 பேரும் கள்ளநோட்டுகளை யாரிடம் இருந்து பெற்று புழக்கத்தில் விட்டனர்? அல்லது அவர்களே ஏதேனும் நவீன எந்திரம் மூலம் தயார் செய்து கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டனரா? இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் நம்பியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×