search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஞ்சா
    X
    கஞ்சா

    புதுக்கோட்டைக்கு காரில் ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா கடத்தி வரப்பட்டது எப்படி?- பரபரப்பு தகவல்கள்

    ஆந்திராவில் இருந்து புதுக்கோட்டைக்கு காரில் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தி வரப்பட்டது எப்படி? என்பது பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
    புதுக்கோட்டை:

    திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு காரில் நேற்று முன்தினம் ஹெராயின் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை திலகர் திடல் அருகே சந்தேகப்படும் படி நின்ற ஒரு காரின் அருகே நின்றவரை இன்ஸ்பெக்டர் பரவாசுதேவன் தலைமையிலான போலீசார் பிடித்து விசாரித்தபோது, காரில் கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து காரில் இருந்து 19 பண்டல் கஞ்சாவையும், அவரிடம் இருந்து ரூ.90 ஆயிரத்தையும் கைப்பற்றி, சிவகங்கை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் இன்ஸ்பெக்டர் ஹேமலதா விசாரணை நடத்திய போது, அவர் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை சேர்ந்த காஜா மைதீனின் மகன் நைனா முகமது (வயது 23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, கஞ்சாவையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கைதானவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. இது குறித்து போலீசார் கூறுகையில், “கைதான நபர் டிரைவர் வேலை மட்டும் செய்து வருகிறார். கஞ்சாவை வாங்கி ஒரு இடத்தில் கொண்டு சேர்ப்பது மட்டும் தான் அவரது வேலை. அவருக்கு குறிப்பிட்ட அளவு தொகையை மட்டும் கொடுக்க கஞ்சா கடத்தல் கும்பல் சம்மதித்துள்ளது. அதன்படி ஆந்திராவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி கொண்டு காரில் நைனா முகமது கடந்த 2 நாட்களுக்கு முன்பு புறப்பட்டுள்ளார். சென்னை, திருச்சி வழியாக புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை பகுதிக்கு சென்று அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தி கொண்டு செல்வதுதான் அவர்களது திட்டம்.

    திருச்சியை தாண்டி கார் வந்தபோது எங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை புதுக்கோட்டை போலீசாருக்கு தெரிவித்தோம். இந்த வழக்கில் மேலும் 4 பேருக்கு தொடர்பு உள்ளது. அவர்களை பிடிக்க அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். போலீசார் வாகன சோதனையின் போது சந்தேகப்படும்படி மேலும் ஒருவரை பிடித்திருந்தனர். அவருக்கும், இந்த வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை. அவர் கர்ப்பிணி மனைவியை ஆஸ்பத்திரியில் விடுவதற்கு வந்தது தெரியவந்தது. அவர் கைது செய்யப்படவில்லை” என்றனர்.

    விசாரணையில் தெரியவந்த தகவலை, கைதான நைனா முகமது வாக்குமூலமாக கொடுத்துள்ளதாக போலீசார் கூறினர். அட்டைப்பெட்டிகளின் மேல் பகுதியில் பெயிண்ட் நிறுவனத்தின் பெயர், உணவு பொருட்களின் பெயர் கொண்டதாக இருந்தது. அதன் உள்ளே கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து நூதன முறையில் எடுத்து வந்துள்ளார். ஊரடங்கு காலத்தில் தீவிர வாகன சோதனை உள்ள நிலையில் ஆந்திராவில் இருந்து காரில் கஞ்சா கடத்தி வந்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் எடை மொத்தம் 144 கிலோ எனவும், அதன் மதிப்பு ரூ.1 கோடியே 4 லட்சத்து 40 ஆயிரம் என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் கைதானவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
    Next Story
    ×