search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் நாளை முதல் இலவசமாக பெறலாம்

    தமிழகம் முழுவதும் 7-ந்தேதி (நாளை) முதல் ரேசன் கடைகளில் ஏப்ரல் மாதத்துக்கான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வினியோகிக்கப்படுகிறது.
    சென்னை:

    கொரோனா ஊரடங்கு உத்தரவால் ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசு நிவாரண நிதியாக ரூ.1000 அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தது.

    மேலும் ஏப்ரல் மாதத்துக்கான அத்தியாவசிய பொருட்களும் விலையின்றி வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தது.

    அதன்படி தமிழகம் முழுவதும் நிவாரண நிதி ரூ.1000 கடந்த 2-ந்தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. டோக்கன் வழங்கப்பட்டு ரேசன் கடைகளில் ரூ.1000 பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    2 நாட்கள் வழங்கப்பட்ட நிலையில் பின்னர் வீடுகளுக்கே வந்து நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி கடந்த சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களும் வீடுகளுக்கு நேரில் சென்று நிவாரண நிதி வழங்கப்பட்டன.

    அரசு வழங்கும் ரூ.1000 நிவாரணநிதி பெறுவதற்கு இன்று கடைசி நாளாகும். இன்று மாலைக்குள் அனைவருக்கும் ரூ.1000 ரொக்கம் கொடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து 7-ந்தேதி (நாளை) முதல் ரேசன் கடைகளில் ஏப்ரல் மாதத்துக்கான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வினியோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் வழங்கப்படும் பொருட்கள் இந்த மாதம் விலை இல்லாமல் இலவசமாக கொடுக்கப்படுகிறது.

    அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் ஆகிய பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு இதன்மூலம் கிடைக்கும். ரூ.1000 ரொக்கம் பட்டுவாடா இன்றுடன் முடிவடைவதால் நாளை முதல் அனைத்து ரேசன் கடைகளிலும் பொருட்களை வினியோகம் செய்ய ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்தநிலையில் அரசின் உத்தரவை பின்பற்றி சமூக இடைவெளி விட்டு பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    அந்தந்த பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் நேரில் சென்று பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும் மார்ச் மாதத்தில் ரேசன் பொருட்கள் பெறாதவர்களும் அதற்கான தொகையினை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

    தமிழகத்தில் 2 கோடி அரிசி குடும்ப அட்டைகள் உள்ளன. அவர்கள் அனைவருக்கும் இந்த மாதம் ரேசன் பொருட்கள் விலை இன்றி வழங்கப்படுகிறது. இதில் முறைகேடுகளில் ஈடுபட்டால் ரேசன் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சிவில் சப்ளை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கொரோனா நிவாரண நிதி ரூ.1000 நேற்றுவரை 80 சதவீதம் பேருக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. இன்று 10 சதவீதம் பேருக்கு கொடுக்கப்படும். மீதமுள்ள 10 சதவீதம் பேர் வெளியூர் சென்றிருக்கிறார்கள். அதனால் அவர்கள் வந்த பின்னர் பெற்றுக்கொள்ளலாம்.

    நிவாரண நிதி வழங்கும் பணியில் ஊழியர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். எந்த புகாருக்கும் இடம் கொடுக்காமல் வினியோகிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் அத்தியாவசிய பொருட்கள் ரேசன் கடைகளில் வினியோகிக்கப்படும். பொது மக்கள் எப்போதும் போல சென்று பெற்றுக்கொள்ளலாம்.

    அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் தேவையான உணவுப் பொருட்கள் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளன. அதனால் பொதுமக்கள் பதட்டம் அடையாமல் போதிய சமூக இடைவெளி விட்டு பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×