search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை மீனாட்சியம்மன் கோவில்
    X
    மதுரை மீனாட்சியம்மன் கோவில்

    மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி கருங்கற்கள் பதிக்கும் பணி - விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையாளர் உத்தரவு

    மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள 4 சித்திரை வீதிகளில் நடைபெற்று வரும் புதிய கருங்கற்கள் பதிக்கும் பணியை வருகிற சித்திரை திருவிழாவிற்குள் முடிக்குமாறு மாநகராட்சி ஆணையாளர் அலுவலருக்கு உத்தரவிட்டார்.
    மதுரை:

    மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள 4 சித்திரை வீதிகளில் புதிய கருங்கற்கள் பதிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    இந்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் விசாகன், வருகிற சித்திரை திருவிழாவிற்குள் பணிகளை முடிக்குமாறு அலுவலருக்கு உத்தரவிட்டார்.

    மேலும் 4 மாசி வீதிகளில் ஸ்மார்ட் சாலை திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை வசதி, 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில் புதிய குடிநீர் இணைப்பு, மழைநீர் வடிகால், தரைவழி மின்வயர் செல்வதற்கான வசதிகள் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    இவற்றில் கீழ மாசி வீதி, தெற்கு மாசி வீதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணியினையும், மேலமாசி வீதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணியினையும் ஆய்வு செய்தார்.

    அதனைத் தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஜான்சிராணி பூங்கா பகுதியில் நடைபெற்று வரும் பணிகளையும், புது மண்டபத்தில் உள்ள கடைகளை மாற்றி அமைப்பதற்காக குன்னத்தூர் சத்திரத்தில் நடைபெற்று வரும் வணிக வளாகம் கட்டும் பணியினையும், வடக்கு ஆவணி மூல வீதியில் நடைபெற்று வரும் பல்லடுக்கு வாகன நிறுத்துமிட கட்டுமான பணிகளையும், பெரியார் பஸ் நிலையத்தில் நடைபெற்றும் வரும் பஸ் நிலைய மேம்பாட்டு பணிகளையும் ஆய்வு செய்து பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு கூறினார்.

    மேலும் வைகை ஆற்றின் தெற்குகரைப் பகுதியில் உள்ள பனையூர் கால்வாயில் இருந்து மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆற்றுடன் இணைப்பு வாய்க்கால் கட்டும் பணியினையும் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது நகரப்பொறியாளர் அரசு, மீனாட்சியம்மன் கோவில் இணை ஆணையர் நடராஜன், கண்காணிப்பு பொறியாளர் சுகந்தி, உதவி ஆணையாளர் (பொ) சேகர். செயற்பொறியாளர் (திட்டம்) ரங்கநாதன், செயற்பொறியாளர் முருகேசபாண்டியன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரைவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×