search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மது விற்பனை
    X
    மது விற்பனை

    தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்: ரூ.385 கோடிக்கு மது விற்க இலக்கு

    தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.385 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு தேவையான சரக்குகளை முன்கூட்டியே இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    சென்னை :

    புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் தமிழகத்தில் மது விற்பனை களைகட்டுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.320 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6-ந்தேதி செவ்வாய்க்கிழமை தீபாவளி பண்டிகை வந்தது.

    இதனால் அதற்கு முந்தைய 3 நாட்களும் கொண்டாட்ட நாட்களாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த நாட்களில் யாரும் எதிர்பாராத வகையில் ரூ.602 கோடிக்கு மது விற்பனையாகி சாதனை படைத்தது. அதாவது கூடுதலாக 34 சதவீதம் மது விற்பனையாகி இருந்தது.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை(27-ந்தேதி) வருகிறது. அரசு வார விடுமுறை நாளிலேயே இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருவதால் கொண்டாட்ட நாட்களின் எண்ணிக்கையும் குறைகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களே கொண்டாட்ட நாட்களாக கணக்கிடப்பட்டுள்ளது.

    மது வகைகள்

    இந்த 3 நாட்களில் மட்டும் ரூ.385 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 25-ந்தேதி ரூ.80 கோடிக்கும், 26-ந்தேதி ரூ.130 கோடிக்கும், தீபாவளி நாளான 27-ந்தேதி ரூ.175 கோடிக்கும் மது விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மதுக்கடைகளுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.

    அதாவது 15 நாட்களுக்கு தேவையான மது வகைகளை இந்த 3 நாட்களில் விற்பனை செய்வதற்காக முன்கூட்டியே இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், சரியான நேரத்தில் கடைகளை திறந்து குறிப்பிட்ட நேரத்தில் மூடவேண்டும் என்றும் எக்காரணத்தை கொண்டு கடைகளை திறப்பதில் தாமதம் ஏற்பட்டுவிடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த ஆண்டு பொருளாதார மந்தநிலையால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி ஜவுளி விற்பனை கடந்த ஆண்டைவிட குறைவாகவே நடந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே இதன் தாக்கம் மது விற்பனையிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்த ஆண்டு எட்ட முடியுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 
    Next Story
    ×