என் மலர்

    செய்திகள்

    சென்னையில் மழை
    X
    சென்னையில் மழை

    சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தண்ணீர் வராவிட்டாலும் இப்போது பெய்துள்ள மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது.
    சென்னை:

    வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்பட வட மாவட்டங்களில் தினமும் இரவு நேரங்களில் மழை பெய்கிறது.

    நேற்று இரவும் விடியவிடிய மழை பெய்தது. எழும்பூர், பாரிமுனை, திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, மணலி, பாடி, அண்ணாநகர், அம்பத்தூர், முகப்பேர், கோயம்பேடு, வடபழனி, கிண்டி, மீனம்பாக்கம், குரோம்பேட்டை, தாம்பரம், மேடவாக்கம், கூடுவாஞ்சேரி உள்பட பல இடங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்தது.

    நள்ளிரவு சுமார் 1 மணிநேரம் பலத்த மழை பெய்ததால் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இன்று அதிகாலை 5 மணிவரை தூரல் விழுந்த வண்ணம் இருந்தது.

    தரை ஈரத்துடன் காணப்படுவதால் வெப்பம் முழுவதுமாக தணிந்துள்ளது. நேற்றிரவு நுங்கம்பாக்கத்தில் 3 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தாலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு தண்ணீர் கூட வரவில்லை.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த 6 மாதமாக நிலவிய கடும் வெப்பம் காரணமாக மழை நீர் அனைத்தையும் வறண்ட நிலையில் உள்ள தரை உறிஞ்சி விடுகிறது. இதனால் மழைநீர் வேகமாக வந்தாலும் அடுத்த சில நிமிடங்களில் தரைக்குள் சென்று விடுகிறது.

    இதனால் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் தொடர்ந்து வறண்ட நிலையில் தான் உள்ளது.

    பூண்டி ஏரியில் மட்டும் ஏற்கனவே தேக்கி வைக்கப்பட்டுள்ள 16 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இன்னும் சில நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால்தான் ஏரிகளுக்கு தண்ணீர் வர வாய்ப்பு உண்டு என்றனர்.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தண்ணீர் வராவிட்டாலும் இப்போது பெய்துள்ள மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரி கூறியதாவது:-

    மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து வீடு வீடாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருவதின் பலனாக நிறைய வீடுகளில் மழைநீரை சேகரித்து பூமிக்குள் விடுகிறார்கள். கிணறு வைத்திருப்பவர்கள் மழை தண்ணீரை கிணற்றில் விடுகின்றனர். இதன்காரணமாக நிலத்தடி நீர்மட்டம் 5 அடிக்கு உயர்ந்துள்ளது.

    மழைநீர் சேகரிப்பு

    தண்ணீர் இல்லாமல் கிடந்த ஆழ்குழாய் கிணறுகளில் இப்போது தண்ணீர் வரத் தொடங்கிவிட்டது. தாம்பரம், குரோம்பேட்டை, மேடவாக்கம், பல்லாவரம், கே.கே.நகர், வடபழனி பகுதிகளில் நிலத்தடிநீர் மட்டம் 5 அடிக்கு மேலே உயர்ந்த காரணத்தால் ‘போர்வெல்’ மூலம் தண்ணீர் அதிகம் கிடைக்கிறது.

    மேடவாக்கத்தில் வீட்டு குடிநீர் இணைப்புகளில் கடந்த 5 மாதங்களாக தண்ணீர் வராமல் இருந்தது. இப்போது நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்த காரணத்தால் ஆழ்குழாய் கிணறு மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றி வீடுகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு குடிநீர் வாரிய அதிகாரி கூறினார்.

    சென்னை வானிலை மைய அதிகாரி கூறுகையில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் கடந்த ஜூன் 1 முதல் ஜூலை 25 வரை 81 மி.மீ மழை பெய்துள்ளது. வட தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக 60 மி.மீ மழை கிடைத்துள்ளது. இது நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகுத்துள்ளதாக தெரிவித்தார்.

    தென்மேற்கு பருவமழை கர்நாடக மாநிலத்தில் தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் வளி மண்டலத்தின் கீழ் அடுக்கில் நிலவும் சுழற்சி காரணமாக தொடர்ந்து மழை பெய்கிறது. இதனால் இன்றும், நாளையும் தொடர்ந்து இரவில் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

    நேற்று இரவு பெய்த மழையால் மாதவரத்தில் 10 மி.மீ, பொன்னேரியில் 14 மி.மீ., பூந்தமல்லியில் 35 மி.மீ, திருத்தணியில் 23 மி.மீ, திருவள்ளூரில் 18 மி.மீ, பூண்டியில் 6 மி.மீ மழை கிடைத்துள்ளது.
    Next Story
    ×