search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு - ஜூலை 16-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
    X

    சசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு - ஜூலை 16-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

    சென்னை எழும்பூர் கோர்ட்டில் நடைபெற்றுவரும் சசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணை ஜூலை 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
    சென்னை:

    ரிசர்வ் வங்கியிடம் இருந்து முறையான அனுமதி பெறாமல் ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கு 1996-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. 

    மேலும், இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை செயற்கைகோள் மூலம் பதிவேற்றம் செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட தொகையையும் இந்திய அரசின் அனுமதியின்றி தனிப்பட்ட முறையில் சிங்கப்பூர் டாலர்களாக பணப்பரிவர்த்தனை செய்ததாகவும் வழக்கு பதியப்பட்டது.

    இந்த வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. 

    நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட சசிகலா, பாஸ்கரன் ஆகியோரிடம் குற்றச்சாட்டு பதிவு செய்ய எழும்பூர் கோர்ட்டு முடிவு செய்தது. இதற்காக இருவரையும் நேரில் ஆஜராகும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.
      
    ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, உடல் நலம் காரணமாக நேரில் ஆஜராக முடியாமல் போனது.

    அந்நிய செலாவணி மோசடி வழக்கில், நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க மே மாதம் 13-ம் தேதி சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என பெங்களூரு சிறைத்துறைக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் கடந்த இரண்டாம் தேதி உத்தரவிட்டது.

    பின்னர் பாதுகாப்பு கருதி அவரை பெங்களூரு பர்ப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து காணொலி மூலம் ஆஜர்படுத்துமாறு கடந்த 9-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த வழக்கு கடந்த 13-ம் தேதியன்று விசாரணைக்கு வந்தபோது பாஸ்கரன் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி எஸ். மலர்மதி முன்பு ஆஜரானார். ஆனால், சசிகலா ஆஜராகவில்லை. 

    சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நகல் கிடைக்க தாமதமானதால் காணொலி காட்சிக்கு ஏற்பாடு செய்ய முடியவில்லை என தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை மே 28-ம் தேதிக்கு நீதிபதி மலர்மதி ஒத்திவைத்திருந்தார்.

    இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதி எஸ்.மலர்மதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. சசிகலாவிடம் வீடியோ கான்பிரன்சிங் முறையில் விசாரணை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பான நகல்களை நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர் அளித்தார்.

    இன்றைய விசாரணைக்கு பாஸ்கரன் வந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான அரசுதரப்பு வழக்கறிஞர் சசிகலாவிடம் முன்வைக்கும் கேள்விகள் தமிழில் இருக்க வேண்டும் என சசிகலா விரும்புவதாக அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இதைதொடர்ந்து கேள்விகளை தமிழில் மொழிபெயர்ப்பதற்கு அவகாசம் அளிக்கும் வகையில் மறுவிசாரணையை ஜூலை 16-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
    Next Story
    ×