search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விளைநிலங்களில் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்- வைகோ வலியுறுத்தல்
    X

    விளைநிலங்களில் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்- வைகோ வலியுறுத்தல்

    காவிரி டெல்டாவில் விவசாய நிலங்களை பாழ்படுத்தும் முயற்சியில் கெயில் நிறுவனம் இறங்கி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது என்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    சென்னை:

    ம.திமு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகில் உள்ள பழையபாளையத்தில் விளைநிலங்களில் எரிவாயு எடுப்பதற்கான ஆழ்குழாய் கிணறுகளை இந்திய எண்ணைய் மற்றும் எரிவாயு நிறுவனம் அமைத்துள்ளது.

    இங்கு எடுக்கப்படும் எரிவாயு, செம்பனார் கோவில் அருகே மேமாத்தூரில் உள்ள கிடங்குக்குக் கொண்டு சென்று சேமிக்கப்படுகிறது. இதற்காக பழையபாளையம் முதல் மேமாத்தூர் வரை சுமார் 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராட்சத குழாய்கள் பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

    விவசாயிகள் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், கெயில் நிறுவனம் மே 16 -ம் தேதி, மேமாத்தூர், காளகஸ்தி நாதபுரம் பகுதியில் குறுவை சாகுபடிக்கு விதை விட்ட மற்றும் நடவு செய்த வயல்களில் பொக்லைன் இயந்திரத்தை இறக்கி பயிர்களை நாசப்படுத்தி, குழாய் பதிக்க முனைந்தபோது, மக்கள் கொதித்து எழுந்தனர்.

    நேற்று முன்தினம் உமையாள்புரம் கிராமத்தில் நடவு செய்த விளைநிலத்தில் ராட்சத குழாய் பதிக்கும் வேலைக்காக பொக்லைன் இயந்திரத்தை இறக்கிப் பயிர்களை அழித்துள்ளது கெயில் நிறுவனம்.

    கொச்சியிலிருந்து பெங்களூருக்கு எரிவாயு குழாய் கொண்டு செல்ல மேற்கு மாவட்ட விளைநிலங்களில் குழாய் அமைக்க கெயில் நிறுவனம் முயற்சித்தபோது, விவசாயிகள் போராடியதால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கெயில் நிறுவனத்துக்கு தடை விதித்தார். உச்சநீதிமன்றம் வரையில் சென்று கெயில் நிறுவனம் அனுமதி பெற்றிருந்தாலும், கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் இன்னமும் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

    இச்சூழலில் காவிரி டெல்டாவிலும் விவசாய நிலங்களை பாழ்படுத்தும் முயற்சியில் கெயில் நிறுவனம் இறங்கி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.


    காவிரி பாசனப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு எடுத்தல் உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களை ரத்துச் செய்யக் கோரி மக்கள் போராட்டம் தீவிரமடையும் சூழலை உணர்ந்துகொண்டு, தமிழக அரசு இத்திட்டங்களுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×