search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினகரன் ஆதரவு 3 எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ்
    X

    தினகரன் ஆதரவு 3 எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ்

    தினகரன் ஆதரவு 3 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். #speakerdhanapal #dinakaransupportmlas
    சென்னை:

    தமிழக சட்டசபையில் மொத்தம் உள்ள 234 இடங்களில் அ.தி.மு.க.வுக்கு சபாநாயகரையும் சேர்த்து 114 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    தி.மு.க.வுக்கு 88 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 8 எம்.எல்.ஏ.க்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு எம்.எல்.ஏ.வும் உள்ளனர்.

    டி.டி.வி.தினகரன் சுயேச்சை எம்.எல்.ஏ.வாக உள்ளார். 22 இடங்கள் காலியான தொகுதியாக உள்ளது. இதில் 18 தொகுதிகளுக்கு கடந்த 18-ம் தேதி இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேலும் 4 தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, அ.தி.மு.க.வில் உள்ள 114 எம்.எல்.ஏ.க்களில் விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 பேரும் கடந்த 1 ஆண்டாக டி.டி.வி. தினகரனுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து வந்தனர். நடந்து முடிந்த தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர்.



    அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக இவர்கள் 3 பேரும் செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்துக்கு புகார்கள் சென்றன. இதனால் அரசு கொறடா ராஜேந்திரன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் சபாநாயகர் தனபாலை சந்தித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு கொடுத்தார். இதற்கு ஆதாரமாக 3 பேரும் தேர்தலின்போது தினகரன் கட்சிக்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்த புகைப்படங்களையும் இணைத்திருந்தார்.

    இதன் அடிப்படையில் 3 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்க சபாநாயகர் தனபால் முடிவு செய்தார். சட்ட விதிகளை ஆராய்ந்த அவர் 3 எம்.எல்.ஏ.க்களும் என்னென்ன விதிமீறலில் ஈடுபட்டுள்ளனர் என்பதை அறிந்தார். இதையடுத்து, 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் விளக்கம் கேட்டு கடிதம் தயாரிக்கப்பட்டது. அதில், “அ.தி.மு.க. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை கொறடா சமர்பித்துள்ளார். இதுகுறித்து நீங்கள் தரும் விளக்கம் என்ன? இக்கடிதம் கண்ட ஒரு வாரத்துக்குள் இதற்கு நீங்கள் விளக்கம் தரவேண்டும். இல்லை என்றால் கட்சி தாவல் விதிப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும்” என்று கூறப்பட்டு இருந்தது. 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் இந்த கடிதத்தை ரிஜிஸ்டர் தபாலில் அனுப்ப சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் அளித்துள்ள புகார் குறித்து விளக்கம் கேட்டு தினகரன் ஆதரவு 3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் தனபால் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். #speakerdhanapal #dinakaransupportmlas
    Next Story
    ×