search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராட்சத அலையில் சிக்கி பலியான சங்கீதா
    X
    ராட்சத அலையில் சிக்கி பலியான சங்கீதா

    குளச்சல் அருகே ராட்சத அலையில் சிக்கிய ஆசிரியை, வியாபாரி பிணமாக மீட்பு

    குளச்சல் அருகே பேஸ்புக் நண்பர் திருமணத்திற்கு வந்த இடத்தில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    நாகர்கோவில்:

    குளச்சல் அருகே இணையம் புத்தன்துறையைச் சேர்ந்தவர் வினோபின் ராஜ் (வயது 30).

    இவர், ஓமனில் கப்பல் செய்யும் இடத்தில் வெல்டராக வேலைபார்த்து வருகிறார். இவரது திருமணம் நேற்று இணையம் புத்தன் துறை கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்தது. திருமண விழாவிற்கு அவரது பேஸ்புக் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

    திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வினோபின் ராஜின் பேஸ்புக் நண்பர்கள் திருப்பூர் ஆத்துகிணத்துப்பட்டி சங்கீதா (24), சேலம் ராமலிங்கம் காலணி சங்கராலயம் ரோட்டையைச் சேர்ந்த மோகன் (33) மற்றும் பலரும் வந்திருந்தனர்.

    திருமண விழாவிற்கு வந்திருந்த பேஸ்புக் நண்பர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் நேரில் அறிமுகம் ஆகிக் கொண்டனர். வினோபின் ராஜின் திருமணம் முடிந்த பிறகு அவர்கள் அங்குள்ள கடற்கரைக்கு சென்றனர்.

    கடற்கரையில் நின்று கொண்டு சங்கீதா, மோகன் உள்பட நண்பர்கள் கால் நனைத்துக் கொண்டிருந்தனர். அப்போது சங்கீதாவின் மூக்கு கண்ணாடி கடலில் விழுந்தது. இதை மோகனும், சங்கீதாவும் தேடினார்கள்.அப்போது வந்த ராட்சத அலை ஒன்று இருவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் கூச்சலிட்டனர். பின்னர் கடல் அலையில் சிக்கிய சங்கீதாவை மீட்டனர். மோகனை அலை உள்ளே இழுத்துச் சென்று விட்டது. அவரை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    மீட்கப்பட்ட சங்கீதாவை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    சங்கீதா பலியானது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சங்கீதா பலியானதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். நள்ளிரவில் சங்கீதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தனர்.

    பலியான சங்கீதா அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    கடல் அலை இழுத்துச் சென்ற மோகனை தேடும் பணி இன்றும் நடந்தது. மோகன் இழுத்துச் சென்ற பகுதியில் இருந்து ஒரு நாட்டிங்கல் தொலைவில் அவர் பிணமாக மிதப்பதை பார்த்த மீனவர்கள் குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    மீனவர்கள் உதவியுடன் மோகனின் உடலும் மீட்கப்பட்டது. கரைக்கு கொண்டு வரப்பட்ட மோகனின் உடலை பார்த்து அவரது உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதனர். பின்னர் அவரது உடல் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பலியான மோகன் காய்கறி வியாபாரி ஆவார். அவருக்கு பானு என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    கடலில் மூழ்கி பலியான சங்கீதா, மோகனின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.
    Next Story
    ×