என் மலர்
செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே கல்லூரி மாணவர் வெட்டி படுகொலை
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜக்கம்பட்டி சீத்தாராம் தாஸ் நகரைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் நாகேந்திரபிரசாத் (வயது 18). ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை தனது நண்பர்கள் 4 பேருடன் வெளியே சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் எண்ணும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இன்று காலை ஜக்கம்பட்டி அருகே உள்ள தனியார் பள்ளிக்கு பின்புறம் காட்டுப்பகுதியில் நாகேந்திரபிரசாத் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். அவரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது. இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்களைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் உடலை போலீசார் கைப்பற்றி ஆண்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருடன் சென்ற நண்பர்கள் எங்கு சென்றார்கள்? என தெரியவில்லை. எனவே இந்த கொலைக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.