search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை, நீலகிரி, வால்பாறையில் கொட்டித்தீர்த்த கோடை மழை
    X

    கோவை, நீலகிரி, வால்பாறையில் கொட்டித்தீர்த்த கோடை மழை

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று பெய்த கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. சமவெளிப்பகுதியில் தகிக்கும் அனல் காற்றில் இருந்து தப்பிக்க ஊட்டியில் தஞ்சமடைந்த சுற்றுலா பயணிகளுக்கு போதிய சீதோஷ்ண நிலை கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்தனர். பசுமை நிறைந்த புல்வெளிகள் காய்ந்து பரிதாபமாக காட்சியளித்தன.

    காட்டுத்தீ ஏற்பட்டு வனப்பகுதிகள் எரிந்து சாம்பலாகி வந்தன. தேயிலைச்செடிகள் காய்ந்து மகசூல் பெரிதும் பாதிக்கப்பட்டது. போதிய தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் காய்கறிகளை பயிரிடவில்லை. சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    இந்நிலையில் நேற்று கருமேகமூட்டம் நிலவியது. காலை 11.30 மணியில் இருந்து திடீரென லேசான மழை பெய்தது.

    பின்னர் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை மதியம் 12.30 மணியில் இருந்து 2 மணி வரை பெய்தது.

    ஊட்டியில் பெய்த மழையால் சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை, மத்திய பஸ் நிலையம், கூட்ஷெட் சாலை, பிங்கர்போஸ்ட், ஊட்டிகுன்னூர் சாலை உள்பட பல்வேறு முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியில் மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், அப்பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது. பிரதான கால்வாயான கோடப்பமந்து கால்வாயில் மழைநீர் அதிகளவில் சென்றது.

    ஊட்டி படகு இல்ல சாலை ரெயில்வே மேம்பாலத்தின் கீழ்பகுதியில் தேங்கி கிடந்த மழைநீரில், வாகனங்கள் ஊர்ந்து சென்றன. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வந்திருந்த பயணிகள் மழையில் நினைந்தபடி மகிழ்ந்தனர்.

    ஊட்டி படகு இல்லத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 2 மணி நேரம் படகு சவாரி நிறுத்தப்பட்டது. ஊட்டி, நஞ்சநாடு, பாலாடா, கேத்தி, தலைகுந்தா, கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.

    இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். நேற்று பெய்த மழையால் காட்டு தீ ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. வனவிலங்குகளுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதால் ஊருக்குள் நுழையும் அச்சமும் நீக்கியது. மழையால் நீலகிரியில் மீண்டும் இதமான சீதோஷ்ண நிலை திரும்பியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    இதேபோன்று கோவை மாவட்டம் மேட்டுப் பாளையம், பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், மருதமலை பகுதியில் சூறாவளியுடன் கோடை மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    கோடை வெயிலில் சிக்கித்தவித்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கோவை மாநகரை பொருத்தவரை மாலை 4 மணி முதலே கார்மேகம் திரண்டிருந்தன. இதனால் திடீர் குளிர்ச்சி ஏற்பட்டது. மாலை 5 மணிக்கு லேசான சாரல் மழை பெய்தது. அனல் காற்று நீங்கி குளிர்ந்த காற்று வீசியது.

    இதேபோன்று கோவை மாவட்டம் வால்பாறையில் பகுதியில் கடந்த 3 நாட்களாக பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் கனமழையும் நகர் பகுதியில் லேசான மழையும் பெய்து வந்தது.

    நேற்று மதியம் 2 மணிமுதல் 3 மணிவரை வால்பாறை நகர் பகுதி உட்பட அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் பலத்த இடி-மின்னலுடன் பலத்த சூறாவளியுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

    Next Story
    ×