search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் லியோனிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதாவினர் மறியல்
    X

    திண்டுக்கல் லியோனிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதாவினர் மறியல்

    கோவை பிரசாரத்தில் பிரதமர் மோடி குறித்த லியோனி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதாவினர் மறியலில் ஈடுபட்டனர். #DindigulLeoni
    கோவை:

    தி.மு.க. பேச்சாளர் திண்டுக்கல் லியோனி கோவை மதுக்கரையில் நேற்று இரவு பிரசாரம் செய்தார்.

    பிரதமர் மோடி போலி வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டார் என குற்றம் சாட்டி பேசினார். அப்போது அங்கு நின்ற பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் லியோனி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘பாரத் மாதா கீ ஜே’ என கோ‌ஷம் எழுப்பினார்.

    இதனால் ஆவேசமடைந்த தி.மு.க.வினர் அவரை விரட்டினர். அப்போது தி.மு.க.வினர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. எனவே அங்கு பதட்டமான சூழல் நிலவியது. பாலசுப்பிரமணியத்தை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாரதிய ஜனதாவினர் அங்கு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு மேலும் அதிகரித்தது.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.இது தொடர்பாக தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் என்பவர் மதுக்கரை போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் முறையான அனுமதி பெற்று தேர்தல் பிரசாரம் நடந்த போது, மதுக்கரை 1-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் ராசு என்ற செல்வராஜ் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

    இதேபோல மதுக்கரை காந்திநகரை சேர்ந்த சத்திய பிரகாஷ் என்பவரும் போலீசாரிடம் ஒரு புகார் அளித்தார். அதில், திண்டுக்கல் லியோனி தனது பிரசாரத்தில் பாரத பிரதமரையும், இந்து கடவுள்களையும் அவதூறாக பேசினார். அப்போது அங்கு நின்ற பாலசுப்பிரமணியத்தை 3 பேர் மிரட்டி தாக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். இருதரப்பு புகார்களையும் பதிவு செய்து கொண்ட போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #DindigulLeoni
    Next Story
    ×