search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை அரசாணையில் வெளியிடலாமா? - ஸ்டாலின் கடும் கண்டனம்
    X

    பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை அரசாணையில் வெளியிடலாமா? - ஸ்டாலின் கடும் கண்டனம்

    பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் அரசாணையில் இடம் பெற்றுள்ளதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். #PollachiCase #mkstalin
    சென்னை:

    பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலம் காதல் வலையில் விழவைத்து, கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து, பணம் பறித்து வார்த்தைகளால் சொல்ல முடியாத கொடூரங்களை நிகழ்த்தியுள்ளனர். 
     
    இதில் தொடர்புடைய சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோரை பொள்ளாச்சி போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து குற்றப்பிரிவு போலீசாரிடம் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட உள்ளன. 

    இதற்கிடையே, பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக இன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் இடம் பெற்றுள்ளது.

    இந்நிலையில், பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் அரசாணையில் இடம் பெற்றுள்ளதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை வெளிப்படுத்தக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் கடுமையான அறிவுறுத்தலை பொள்ளாச்சி விவகாரத்தில் மீறிவிட்டது அதிமுக அரசு. இனி யாரும் புகார் கொடுக்கக் கூடாது என மிரட்டுகிறதா?

    குற்றவாளிகளைக் காப்பாற்ற தொடரும் ஆளும் தரப்பின் கபட நாடகம் இது என பதிவிட்டுள்ளார். #PollachiCase #mkstalin
    Next Story
    ×