search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் வரும் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவேன் - வைகோ அறிவிப்பு
    X

    தமிழகம் வரும் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவேன் - வைகோ அறிவிப்பு

    வருகிற 1, 6-ந்தேதிகளில் தமிழகம் வரும் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவேன் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். #Vaiko #PMModi
    ஆலந்தூர்:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சுற்றுச்சூழல் போராளி மாயமானது குறித்து ரெயில்வே போலீஸ் வழக்குப் பதிவு செய்தது. பின்னர் அது சட்டம்-ஒழுங்கு போலீசாருக்கு மாற்றப்பட்டது. ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகார் வரவில்லை என்றும் முகிலன் குடும்பத்தினர் புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி இருக்கிறார்.

    முகிலனின் மகன் கார்முகில், வக்கீல் ஹென்றி ஆகியோர் முகிலன் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் செய்து இருக்கிறார்கள். ஆனால் முதல்-அமைச்சர் புகார் வரவில்லை என்று கூறுவது ஏன் என்பது புரியவில்லை.

    முகிலன் காணாமல் போகும் முன்பு ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் காவல் துறை குறித்து குற்றம்சாட்டி இருக்கிறார். பல ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறி இருக்கிறார். அதன் பிறகு அவர் காணாமல் போய் இருப்பதால் பயம் ஏற்பட்டுள்ளது.

    முகிலனை கண்டு பிடித்து தர வேண்டும் என்ற கோரிக்கைக்காக நல்லக்கண்ணு தலைமையில் மனித சங்கிலி நடந்தது. ம.தி.மு.க. உயர்மட்டக்குழு கூட்டத்தை தள்ளி வைத்துவிட்டு அதில் நான் கலந்துகொண்டேன். நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது, அவரை சந்திக்கச் சென்ற என்னை போலீசார் தடுத்தனர். அப்போது பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் போராடிய நான் உள்பட 6 பேர் மீது போலீசார் பொய் வழக்கு போட்டனர். இது ஜனநாயகத்தின் குரல் வளையை நசுக்கும் செயல். முகிலன் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்க வேண்டும்.

    பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது மின்னல் வேகத்தில் தாக்குதல் நடத்திய ராணுவ வீரர்களுக்கு 120 கோடி மக்களும் கடமைப்பட்டிருக்கிறார்கள். ம.தி.மு.க. சார்பில் ராணுவத்தினருக்கு எங்கள் வணக்கம்.

    தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுமா? என்பது குறித்து நான் கருத்து கூற முடியாது.



    பிரதமர் மோடி வருகிற 1, 6-ந்தேதிகளில் தமிழகம் வருகிறார். அவர் கட்சி கூட்டத்துக்கு, தேர்தல் பிரசாரத்துக்கு வந்தால் ஜனநாயகத்தை மதித்து எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன்.

    ஆனால் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி 100-க்கும் மேற்பட்ட துரோகங்களை செய்து இருக்கிறார். அரசு விழாக்களில் கலந்து கொள்வதற்காக மோடி வர இருக்கிறார். எனவே அவருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு வைகோ கூறினார். #Vaiko #PMModi
    Next Story
    ×