search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேமுதிகவுடன் கூட்டணி பேசுவோம் - கமல்ஹாசன் பேட்டி
    X

    தேமுதிகவுடன் கூட்டணி பேசுவோம் - கமல்ஹாசன் பேட்டி

    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணிக்காக தே.மு.தி.க.வுடன் பேச வாய்ப்பு இருந்தால் பேசுவோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #DMDK
    ஆலந்தூர்:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகளின் கூடாரத்தை இந்திய விமானப்படை அழித்துள்ளது சரியான பதிலடி. வீரம், திறமை நிறைந்த விமானப்படைக்கு ஒரு இந்தியனாக எனது நன்றி.

    ரஜினியுடன் எப்போது வேண்டுமானாலும் பேசுவேன். இதற்கு போன் வசதியும், மனதும் உண்டு.



    தே.மு.தி.க.வுடன் கூட்டணிக்காக பேச வாய்ப்பு இருந்தால் பேசுவோம். கூட்டணி குறித்து சில கட்சிகள் எங்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியோடுதான் போட்டியிடுவோம். தேவைப்பட்டால் தான் தனித்து போட்டி. அதுக்கும் தயாராக இருக்கிறோம். ஆனால் கருத்து வேறுபாடு உடையவர்களுடன் கூட்டணி கிடையாது.

    21 தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிட தயாராக இருக்கிறோம். ரஜினி எங்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு அளிப்பாரா? அல்லது சட்டமன்ற தேர்தலுக்கு ஆதரவு அளிப்பாரா? என்று தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. முதலில் ரஜினி கட்சி ஆரம்பிக்க வேண்டும். பின்னர் ஆதரவு குறித்து பேசுவோம்.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இந்த மாதம் 28-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி வரை விருப்ப மனு படிவம் வழங்கப்படும்.

    இதில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் மட்டும் இல்லாது உறுப்பினர் அல்லாதவர்கள், சிறந்த எம்.பி. ஆக வரவேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் விருப்ப மனு அளிக்கலாம். விருப்ப மனுவை ரூ.10 ஆயிரம் கட்டி பெற்றுக் கொள்ளலாம்.

    அரசியலில் விமர்சனம் இயல்பு. கூட்டணி வைப்பது இயல்பு. ஆனால் கருத்து ஒத்துப்போவது என்பது மிக முக்கியம்.

    ‘பி டீம்’ என்பதற்கு சரியான பதிலடியாக மீண்டும் கெட்ட வார்த்தையை பயன்படுத்த மாட்டேன். செயலின் மூலம் பதிலடி இருக்கும்.

    அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணி பணத்திற்காகத்தான் என்று எழும் விமர்சனத்திற்கு மக்களின் எண்ணம் எதுவோ அதுவே எனது எண்ணம்.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #DMDK

    Next Story
    ×