search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது
    X

    நெல்லை அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது

    நெல்லை அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை பகுதியில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் பலர் போதை பழக்கத்திற்கு உட்பட்டு மோதல்களில் ஈடுபட்டு வந்தனர். இதை தடுக்க சமீபத்தில் நெல்லை பகுதியில் அதிரடி சோதனை நடத்தி ஏராளமான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    கஞ்சா வியாபாரிகள் 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து நெல்லை பகுதியில் ஏராளமாக தடை செய்யப்பட்ட “போதை பாக்கு” உள்ளிட்ட தடை செய்யப்பட்டபுகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட சிறப்பு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன.

    இதைத்தொடர்ந்து சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் இன்று காலை நெல்லை பேட்டை அருகே உள்ள திருவேங்கடநாதபுரம் செல்லும் ரோட்டில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே ஒரு லாரி சந்தேகப்படும்படி சென்றது. அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டு முன்பு லாரி நிறுத்தப்பட்டது. அதில் இருந்து போதை பாக்குகள், புகையிலை பொருட்கள் இறக்கி வைக்கப்பட்டன. இதை நோட்டமிட்ட போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்து அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு போதை பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள் குவியல் குவியலாக வைக்கப்பட்டிருப்பதை பார்த்தனர். இதையடுத்து அவற்றை கொண்டு வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். அருகில் நின்ற லாரி டிரைவர் சம்பத்(30), கிளீனர்(28) ஆகிய 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். இதை கவனித்த சிலர் அந்த வீட்டின் பின்பக்க கேட் சுவர் வழியாக தப்பி ஓடிவிட்டனர். உடனே அவர்களை போலீசார் விரட்டினர். போலீசார் சுற்றி வளைத்து மடக்கியதில் நெல்லையைச் சேர்ந்த அன்வர் என்பவர் பிடிபட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து போலீசார் வீட்டில் சோதனை போட்டனர்.

    பெட்டி பெட்டியாக வைக்கப்பட்டிருந்த போதை பாக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பல மூட்டைகளிலும் போதை பாக்குகள் கட்டி வைக்கப்பட்டு இருந்தன. அந்த வீட்டின் அனைத்து அறைகளிலும் போதை பாக்குகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.15 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்து, சுத்தமல்லி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரிசித்ரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்வரை உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய நெல்லை வியாபாரி ஹனீபா உள்பட சிலரை போலீசார் தேடிவருகிறார்கள்.

    Next Story
    ×