search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குரங்கணி தீ விபத்து எதிரொலி - சுற்றுலா பயணிகள் வருகையை தடுக்க அதிகாரிகள் ஆய்வு
    X

    குரங்கணி தீ விபத்து எதிரொலி - சுற்றுலா பயணிகள் வருகையை தடுக்க அதிகாரிகள் ஆய்வு

    குரங்கணி தீ விபத்தை தொடர்ந்து வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வருகையை தடுக்க அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனையடுத்து மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

    இருந்த போதும் கொழுக்குமலை அருகே 6000 அடி உயரத்தில் உள்ள திப்படா மலைப்பகுதிக்கு பாதுகாப்பற்ற முறையில் கேரள மாநிலம் மூணாறு வழியாக சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர்.

    இவர்களுக்கு உதவுவதற்காக கேரள வனத்துறை சார்பில் ஜீப்புகளும் இயக்கப்பட்டு வந்தன. இது குறித்து தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் தேயிலை எஸ்டேட் மேலாளர் ஜானி புகார் அளித்தார்.

    அதன் பேரில் குரங்கணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், குமரேசன், ராமதாஸ், மாவட்ட வன அலுவலர் கவுதம், உதவி வன அலுவலர் மகேந்திரன், போடி வனச்சரகர் ஆகியோர் அடங்கிய வனக்குழுவினர் திப்படா மலைப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இது குறித்த அறிக்கையை மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி.க்கு அவர்கள் அளித்துள்ளனர். இது குறித்து வன அலுவலர் கவுதம் தெரிவிக்கையில், திப்படா மலைக்குன்று கேரள-தமிழக எல்லைப்பகுதியில் உள்ளது. இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் ஊராட்சியிடம் சுற்றுலா பயணிகள் தற்காலிக அனுமதி பெற்று இங்கு வருகின்றனர்.

    இது குறித்து தேனி மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர்களிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வருகையை தடுக்க அவர்கள் உறுதியான நடவடிக்கையை விரைவில் அறிவிப்பார்கள்.

    வனப்பகுதியில் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை தீ விபத்து நடக்கும் காலமாகும். இதன் காரணமாகவே இந்த கால கட்டங்களில் சுற்றுலா பயணிகள் வருவதற்கு கண்டிப்பான தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதனை மீறி குறுக்கு வழியில் வரும் சுற்றுலா பயணிகள் விபத்தில் சிக்கிக் கொள்வதை தடுக்க தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.

    அதிகாரிகள் ஆய்வு அறிக்கையை சமர்பித்து உள்ளதால் விரைவில் தடை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×