search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எதிர்க்கட்சியில் பிரதமர் வேட்பாளர் யார்?- தமிழிசை கேள்வி
    X

    எதிர்க்கட்சியில் பிரதமர் வேட்பாளர் யார்?- தமிழிசை கேள்வி

    கொல்கத்தாவில் நேற்று 22 எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்துள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் யார் என்று அந்த உதிரி கூட்டணியால் அறிவிக்க முடியவில்லை என்று தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார். #tamilisai #pmcandidate

    அவனியாபுரம்:

    மதுரையில் வருகிற 27-ந்தேதி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    அடிக்கல் நாட்டு விழா முடிந்ததும் மதுரை மண்டேலா நகர் வாஜ்பாய் திடலில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

    பொதுக்கூட்ட பந்தலுக்கான கால்கோள் விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொடநாடு வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் தி.மு.க.வினர்தான் ஜாமீன் கொடுத்து இருக்கிறார்கள். இதிலிருந்தே இந்த விவகாரத்தில் தி.மு.க.வின் சதி இருப்பது தெரிகிறது.

    மதுரையில் வருகிற 27-ந்தேதி நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். இதில் 10 பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். பிப்ரவரி 10, 19 தேதிகளிலும் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

    கொல்கத்தாவில் நேற்று 22 எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்துள்ளது. இது மக்களுக்கு எதிரான கூட்டணி ஆகும். அந்த மேடையில் அமர்ந்திருந்த அனைவரும் பிரதமராக தகுதி உடையவர்கள் என மம்தா கூறுகிறார்.பிரதமர் வேட்பாளர் யார் என்று அந்த உதிரி கூட்டணியால் அறிவிக்க முடியவில்லை.

    ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறிய மு.க.ஸ்டாலின் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அதை ஏன் கூறவில்லை?. மு.க.ஸ்டாலின் கொல்கத்தாவில் வங்க மொழியில் பேசியது பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றி.


    பெரியாரை பற்றி பேசும் அவர் வங்கத்தில் விவேகானந்தரை பற்றி பேசி உள்ளார். இதுவும் பிரதமருக்கு கிடைத்த வெற்றிதான்.

    மத்திய-மாநில அரசுகள் இணக்கமாக இருப்பதால் தான் மதுரையில் நேற்று ‘ஸ்மார்ட்சிட்டி’ திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட திட்டங்கள் 18 மாதங்களில் முடிவடையும் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறி இருக்கிறார். மத்திய -மாநில அரசுகள் இணக்கமாக இருந்து மாநில வளர்ச்சிக்கு திட்டப்பணிகள் மேற்கொள்கின்றன.

    தமிழகத்தில் பா.ஜனதா காலூன்றி விட்டதா? என்று கேட்கிறார்கள். இன்றுதான் பந்தக்கால் நாட்டி இருக்கிறோம். மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். மற்ற கட்சிகளை பார்த்து இதுபோன்று கேள்விகளை கேட்பதில்லை. நாங்கள் வளர்ந்து வருவதால்தான் எங்களை பார்த்து கேட்கிறார்கள்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #tamilisai #pmcandidate #mamata #mkstalin

    Next Story
    ×