search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கல் பண்டிகை - தலைவர்கள் வாழ்த்து
    X

    பொங்கல் பண்டிகை - தலைவர்கள் வாழ்த்து

    பொங்கல் பண்டிகையையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Pongal
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி:-

    உலக மக்கள் பல தொழில்கள் செய்து வந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானதாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் போற்றப்படுகிறது. இத்தகையை சிறப்புக்குரிய உழவர் பெருமக்களின் நலன்களைப் பேணிக் காத்திடவும், அவர்களின் வாழ்வு வளம் பெறவும் எம்.ஜி.ஆரும், புரட்சித் தலைவி அம்மாவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்கள். அந்த வகையில் நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு செயல்பட்டு வரும் அ.தி.மு.க. அரசும், உன்னதத் திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி, விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக செயல்பட்டு வருகிறது.

    மக்கள் அனைவருடைய இல்லங்களிலும் பொங்கட்டும் பொங்கல், இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள் என்று மனதார வாழ்த்தி அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எங்களது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன்:-

    அறுவடை திருவிழாவான இந்த பொங்கல் நாளிலே, இறைவனுக்கும், உழைத்தோருக்கும், உழைப்புக்கு பக்கபலமாக இருந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்றியை செலுத்தி, நம்முடைய நாடு மேலும் பல வெற்றிகளை அடைய கூடிய வகையில் இறைவன் நமக்கு அருள வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இந்த பொங்கல் விழாவை கொண்டாடுவோம்.

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்:-

    இந்த பொங்கல் ஆரோக்கிய பொங்கலாக மலர, மருத்துவ காப்பீட்டு திட்டமும், சமூக நீதிப் பொங்கலாக மலர, 10 சதவீத இட ஒதுக்கீடும், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும். தாமரைப் பொங்கலாக, தமிழகத்திற்கு எய்ம்ஸ் கிடைக்கும் தாமரைப் பொங்கலாக தமிழ்ப் பொங்கலாக மலரும், இந்த பொங்கல் தாமரை மலர் போல், அனைவரும் வாழ்வும் மலர பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதைப் போல, தை பிறந்து ஆட்சி மாற்றம் நிகழ்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

    இந்நன்நாளில் ராகுல் காந்தி பாரதப் பிரதமராக பொறுப்பு ஏற்பதற்கு சபதம் ஏற்று செயல்படுவோம். தமிழர்களின் வாழ்வாதாரத்தோடு பின்னிப் பிணைந்த இந்நன்நாளில் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன்:-

    விவசாய விரோத திட்டங்கள், விவசாய நிலங்களில் திணிக்கப்படுவால், விவசாயிகள் கொந்தளிக்கும் மன நிலையோடு ஒவ்வொரு நாளும் போராட்ட களத்திற்குள் தள்ளப்பட்டிருக்கும் நிலையில் உள்ளனர். இதனை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு. ஏனெனில் விவசாயத்திற்கும், உணவு உற்பத்திக்கும் மாற்று இல்லை என்பதை இத்தருணத்தில் உணர்ந்திடுவோம், உணர்த்திடுவோம். பிறக்கும் தை அனைவரின் வாழ்விலும் நல்ல விடியலை ஏற்படுத்தட்டும்.

    டாக்டர் ராமதாஸ்:-

    அனைவரின் துயரங்களும் தீர வேண்டும்; நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவை செழிக்க வேண்டும் என்பது தான் விருப்பம். அதற்கேற்ற வகையில் தைத் திருநாளும், தமிழ் புத்தாண்டும் தமிழக மக்களுக்கு அனைத்து வகையான தீமைகளில் இருந்தும் விடுதலை பெற்றுத்தர வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க அனைவரும் இந்நாளில் உறுதியேற்க வேண்டும்.

    இன்பத் திருநாள், நம் பண்புத் திருநாள் தை பொங்கல் என்பதால் தாய்த் தமிழகத்தில் வாழும் தமிழர்களுக்கும், தரணி வாழ் தமிழர்களுக்கும், குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கும் என் இதயம் நிறைந்த இனிய தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன்:-

    பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகி வரும் நம் மண்ணை மீட்கவும் நமது வாழ்வாதாரமான விவசாயம் மற்றும் விவசாயப் பெருங்குடிகளின் வாழ்வுரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்கவும், பண்பாட்டுத் தளத்தில் மேலும் சனாதனத்தை நிலைநிறுத்த முயலும் சங்பரிவார் கும்பலிடமிருந்து இத்தேசத்தை மீட்கவும் இந்தப் பொங்கல் திருநாளில் சனநாயக சக்திகள் யாவரும் உறுதியேற்போம் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுப்பதுடன், உலகம் முழுவதுமுள்ள தமிழ்மக்கள் அனைவருக்கும் எமது மனம்நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    தை முதல் பேதங்களும், பிணக்குகளும், மோதல்களும், முரண்பாடுகளும் முழுமையாக மறைந்து, நல்லதே நடந்து, ஏழை, எளிய மக்கள் வாழ்வில் உயர வழி பிறந்து, அனைத்து தரப்பு மக்களும் நல்வாழ்க்கை வாழ்ந்து, தமிழ்நாடு வளம் பெற இயற்கையும், இறைவனும் துணை நிற்க வேண்டி தமிழ் மக்களுக்கு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன்:-

    மேகதாது அணைகட்டு செயல், இயற்கை வளங்கள் மீதான கார்பரேட் ஆதிக்கம், சமூக நீதி கோட்பாட்டை சிதைக்கும் மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறை, அரசியல் சாசனத்திற்கே ஏற்பட்டுள்ள ஆபத்து அறிவியலுக்கு பொருந்தாத சாதிய தப்பெண்ணெங்கள் தேசத்தின் புகழார்ந்த பொது துறைகளை சிதைக்கும் செயல், தொழிலாளர் உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதல் என அனைத்தையும் எதிர்த்து போராடி வெற்றிபெற தைதிருநாளில் சபதமேற்போம்.

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    தமிழ் மரபை போற்றி பேணும் நாளாக பொங்கல் விழா ஆண்டுதோறும் உலகெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருவது தனி சிறப்பு.

    இயற்கையை வணங்கிய தமிழனின் தொன்மையான வரலாற்றை போற்றி நமது கலாச்சாரமும், நாகரிகமும் என்றும் தொடர, தமிழ் இனத்தின் தனிப்பெரும் விழாவான பொங்கல் திருநாளிலே உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும், உழவர்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆன்மிக குரு பங்காரு அடிகளார்:-

    அனைவருக்கும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள், மக்கள் ஆன்மிகத்துறையில் ஈடுபட்டு நல்ல எண்ணம், நல்ல உள்ளம் பெற்று நன்றாக இருக்க வேண்டும். அனைத்து உயிரினங்களும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். பலபேர் ஒன்று கூடி நல்ல எண்ணத்தோடும், நல்ல வார்த்தையோடும், நல்ல செயலோடும் பொங்கலோ பொங்கல் என்று சொல்லும்போது, உள்ளம் பொங்கும் புன்சிரிப்பாக மாறி அனைவருக்கும் நல்லது ஏற்படும்.

    என்.ஆர். தனபாலன்

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன்:-

    தமிழ் மக்களின் கலாச்சாரமும், பண்பாடும் உலகம் முழுவதும் பரவி ஒற்றுமை ஓங்கி வளர்ந்து, சண்டை சச்சரவுகள் மார்கழி பனியில் கரைந்து பிறக்கிற தை திங்கள் அனைவருக்கும் நல்வழி காட்டி, தமிழர்களின் வாழ்வு ஏற்றம் காணட்டும்.

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-

    இந்த நன்னாளில், கார்காலக் குளிரும், மார்கழி பனியும் விலகி, வாழ்வில் மாற்றம் வருவது போல் உலகத் தமிழர்கள் அனைவர் வாழ்விலும் பொங்கலோ பொங்கல் என பொங்கிடும் பொங்கல் போல் மகிழ்ச்சி பொங்கி நல்லறம் தழைத்தோங்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சாதி, மத வேறுபாடுகளை மறந்து, இன, மொழி பாகுபாடுகளை துறந்து நாம் எல்லோரும் ஓர் இனம் ஒன்று பட்ட தமிழினம் என்னும் உணர்வோடு இந்நாளை சிறப்புடன் கொண்டாடி மகிழ்கின்றோம். தமிழக மக்கள் அனைவருக்கும் உழவர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாள் மற்றும் திருவள்ளுவர் தினம், ஆகிய திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    மேலும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ள தலைவர்கள் விவரம் வருமாறு-

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், நிலத்தரகர் சங்க தலைவர் வி.என். கண்ணன், மனித நேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன்அன்சாரி, தமிழர் தேசிய கழக தலைவர் வேலு. தாஸ் பாண்டியன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், கிறிஸ்தவ முன்னேற்ற கழக தலைவர் எஸ்.ஜோசப் பெர்னாண்டோ உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Pongal
    Next Story
    ×