search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கல் பண்டிகை - சென்னையில் இருந்து ஒரேநாளில் 1½ லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
    X

    பொங்கல் பண்டிகை - சென்னையில் இருந்து ஒரேநாளில் 1½ லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

    பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து ஒரேநாளில் 1½ லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் செய்துள்ளனர். #Pongal
    சென்னை:

    பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்று கொண்டாட வசதியாக 14-ந் தேதி அரசு விடுமுறை அளித்துள்ளதால் தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

    இதனால் நேற்று முதல் பயணிகள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். பள்ளி, கல்லூரிகள் உள்பட ஐ.டி. நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதால் வெளியூர் செல்லக்கூடியவர்கள் பஸ், ரெயில் நிலையங்களில் குவிந்தனர்.



    சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் சென்ற அனைத்து ரெயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தன. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் மக்கள் படிக்கட்டு வரை நின்று பயணம் செய்யும் நிலை இருந்தது.

    பொங்கல் பண்டிகை கூட்டத்தை சமாளிக்க அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 4 நாட்கள் சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது.

    சென்னையில் இருந்து 14 ஆயிரம் சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வழக்கமாக செல்லும் 2275 பஸ்களோடு கூடுதலாக சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளன.

    நேற்று முதல் வெளியூர் செல்லும் பயணிகள் குவியத்தொடங்கினர். வழக்கமான பஸ்கள் தவிர கூடுதல் 748 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 3,100 பஸ்கள் சென்னையில் இருந்து இயக்கப்பட்டன.

    ஒரு லட்சத்து 45 ஆயிரம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். முன்பதிவு செய்த பயணிகள் எவ்வித சிரமமும் இன்றி பயணம் செய்தனர். முன்பதிவு செய்யாத பயணிகள் அலைந்து திரிந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது.

    கோயம்பேடு, மாதவரம், தாம்பரம், கே.கே.நகர், பூந்தமல்லி ஆகிய 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோயம்பேட்டில் இருந்து மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் போன்ற தென் மாவட்டங்களுக்கும், வேலூர், ஆரணி, வந்தவாசி பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    நேற்றைவிட இன்று பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று 3741 பஸ்கள் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்கின்றன.

    அரசு பஸ்களில் பயணம் செய்ய ஒரு லட்சத்து 54 ஆயிரம் பேர் மொத்தம் முன்பதிவு செய்துள்ளனர். இதில் சென்னையில் இருந்து மட்டும் 59 ஆயிரம் பேர் செல்ல முன்பதிவு செய்தனர்.

    சிறப்பு பஸ்கள் 14-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. வெளியூர் செல்லக்கூடிய பயணிகள் நெரிசலில் சிக்காமல் செல்ல ஏதுவாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விரிவான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி அதிகாரிகள் அனைத்து பஸ் நிலையங்களிலும் முகாமிட்டு பயணிகள் தேவை அறிந்து சிறப்பு பஸ்களை தேவையான இடத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள். #Pongal
    Next Story
    ×