என் மலர்
செய்திகள்

கடலூர் அருகே விபத்து - வாலிபர் பலி
பாகூர்:
கடலூர் புதுபாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி சரளா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
ரமேசின் உறவினர் ஒருவர் நேற்று இறந்து போனார். இந்த தகவலை கூறுவதற்காக இன்று காலை பாகூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு ரமேஷ், அவரது உறவினர் பிரவீன் (20), ஷேக் முகமது (39) ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
அங்கு சென்று விட்டு பாகூரில் இருந்து கடலூர் ரோட்டில் திரும்பிய போது புதுவையில் இருந்து கடலூர் நோக்கி சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்ற ரமேஷ் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றும் பிரவீன், ஷேக் முகமது படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரவீன், ஷேக்முகமது இருவரையும் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ரமேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.