search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து - தி.மு.க., அ.ம.மு.க. வேட்பாளர்கள் கண்டனம்
    X

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து - தி.மு.க., அ.ம.மு.க. வேட்பாளர்கள் கண்டனம்

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு தி.மு.க., அ.ம.மு.க. வேட்பாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #TiruvarurByElection
    திருவாரூர்:

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து தி.மு.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூண்டி கலைவாணன் கொரடாச்சேரியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தலை கண்டு தி.மு.க. அஞ்சியது கிடையாது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக நிவாரணம் சென்றடைய வேண்டும். அதற்கு இந்த தேர்தல் தடையாக இருந்து விடக்கூடாது என்ற சமூக அக்கறையில்தான், தேர்தலை தள்ளி வைக்க கோரிக்கைகளை வைத்தோம். ஆனால் அ.தி.மு.க. தேர்தலை கண்டு அஞ்சியது. அதனால்தான் வேட்பாளரை அறிவிக்க தயங்கியது. மக்களின் மனநிலையை தெரிந்துகொண்ட அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் தேர்தலை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. தேர்தலை எப்போது நடத்தினாலும் எதிர்கொள்ள தி.மு.க. தயாராக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருவாரூர் தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ்.காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தலை சந்திக்க அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் தேசிய கட்சிகளுக்கு அச்சம் உள்ளது. இதன் காரணமாகவே தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாரம்பரியமான கட்சி என்று சொல்லிக்கொள்ளும் தி.மு.க.வும், ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க.வும் தேசிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளன. மக்களுக்கான பணிகளுக்காக தேர்தல் நிறுத்தப்பட்டு இருந்தால் வரவேற்கலாம். ஆனால் மக்களின் சிந்தனைக்கு எதிராக இந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.#TiruvarurByElection
    Next Story
    ×