search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி தென்சென்னை மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடியபோது எடுத்த படம்.
    X
    பிரதமர் மோடி தென்சென்னை மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடியபோது எடுத்த படம்.

    திரிபுராவை போன்று தமிழகத்திலும் வெற்றி பெற பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

    பா.ஜனதா நிர்வாகிகள் அதிக ஆர்வத்துடன் கடினமாக உழைத்தால் திரிபுராவை போன்று தமிழகத்திலும் வெற்றி பெறலாம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். #BJP #Modi
    சென்னை :

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ‘என் வாக்குச்சாவடி வலுவான வாக்குச்சாவடி’ என்ற தலைப்பில் நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடி முகவர்கள், பா.ஜனதா நிர்வாகிகளுடன் தொகுதி வாரியாக காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல் நடத்தி வருகிறார்.

    தமிழகத்தில் கடந்த 15-ந் தேதி கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, நாமக்கல், சேலம் ஆகிய 5 தொகுதிகளுக்கு உள்பட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார். இதைத்தொடர்ந்து தென்சென்னை, காஞ்சீபுரம், விழுப்புரம், வேலூர் மற்றும் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிகளுக்கு உள்பட்ட பா.ஜனதா நிர்வாகிகளுடன் நேற்று மாலையில் கலந்துரையாடல் நடத்தினார்.

    சென்னை தியாகராய நகர் பர்கீட் சாலையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்ற தென்சென்னை தொகுதி நிர்வாகிகளுக்கான கூட்டத்தில் அவர் உரையாற்றிய போது கூறியதாவது:-

    தமிழகம் மற்றும் புதுச்சேரி இளைஞர்கள், பா.ஜனதாதான் தங்கள் கனவுகளை நிறைவேற்றும் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு நான் வழக்கமாக வருவது உண்டு. தமிழகம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஸ்மார்ட் சிட்டிக்காக தென்சென்னை தேர்வு செய்யப்பட்டு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வர இருக்கிறது. கல்வி என்பது வெறுமனே விஷயங்களை திணிப்பது மட்டும் அல்ல. திறமைகளையும் வளர்க்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டு 13 ஆயிரத்துக்கும் அதிகமான திறன் வளர்ச்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

    காங்கிரஸ் கட்சியினர் மக்கள் மத்தியில் பொய்யான தகவல்களை பரப்புவதை முக்கியமாக கொண்டு இருக்கிறார்கள். மக்களை தவறான பாதையில் வழிநடத்துகிறார்கள். இதை தடுப்பது நம் கைகளில் தான் உள்ளது. நாம் உண்மைகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.

    தமிழகம், புதுச்சேரியில் உள்ள கட்சி நிர்வாகிகள் இன்னும் அதிகமான ஆர்வத்துடன் உழைக்க வேண்டும். திரிபுரா போன்ற மாநிலத்தில் பா.ஜனதாவின் வெற்றிக்கு காரணம், கட்சி நிர்வாகிகளின் கடின உழைப்பு தான். அதைப்போல தமிழக நிர்வாகிகளும் இன்னும் அதிகமான ஆர்வத்துடன் கடினமாக உழைத்தால் இங்கும் நாம் வெற்றி பெறமுடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்த தலைவர் இல.கணேசன், தென்சென்னை மாவட்ட தலைவர் டால்பின் ஸ்ரீதர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதைப்போல காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் செங்கல்பட்டில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடந்தது. இதற்கு கட்சியின் மாநில செயலாளர் கே.டி.ராகவன் தலைமை தாங்கினார்.

    அதில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பேசும்போது, ‘மத்திய அரசு இந்தியா முழுவதும் தரமாகவும் இலவசமாகவும் கல்வியை அளித்து வருகிறது. அதிலும் தமிழகத்தில் மத்திய அரசு பள்ளிகளில் கட்டணம் இல்லாமல் கல்வி கற்று தரப்படுகிறது. இதைவிட தரமான இலவச கல்வி அளிக்க முயற்சி எடுத்து வருகிறோம்’ என்றார். 
    Next Story
    ×