search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேப்பாக்கத்தில் அரசாணை எரிப்பு போராட்டம் - 200 ஆசிரியர்கள் கைது
    X

    சேப்பாக்கத்தில் அரசாணை எரிப்பு போராட்டம் - 200 ஆசிரியர்கள் கைது

    சேப்பாக்கத்தில் அரசாணைகளை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 200 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். #teachers #teachersarrest

    சென்னை:

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் அரசாணை எரிப்பு போராட்டம் இன்று நடந்தது.

    அனைத்து மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    சென்னை சேப்பாக்கத்தில் மாநில பொதுச் செயலாளர் மயில் தலைமையில் நடந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்-ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    தமிழக அரசு வெளியிட்ட 1988-ம் ஆண்டு அரசாணை மற்றும் 2009-ம் ஆண்டு அரசாணைகளை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

     


    இதுகுறித்து பொதுச் செயலாளர் மயில் கூறியதாவது:-

    தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம், 1988-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தமிழக அரசு 7-வது ஊதியக் குழுவை அமல்படுத்தி இணையாக வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை குறைத்து விட்டது. இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் ரூ.5,500 இழப்பு ஏற்பட்டது.

    இந்த இழப்பை சரி செய்ய வேண்டும் என்று கடந்த 9 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இந்த நிலையில் 8-வது ஊதியக்குழுவை அமல்படுத்தி வெளியிட்ட அரசாணை, 303 மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க சிபாரிசு செய்யவில்லை.

    இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் ரூ.14,800 இழப்பு ஏற்பட்டது. ஒரே கல்வி, ஒரே பணியினை செய்து வரும் ஆசிரியர்களுக்கு 3 விதமான ஊதியம் வழங்கப்படும் நிலை உள்ளது. இதனால் இடைநிலை ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஊதிய இழப்பை சரி செய்ய வேண்டும் என இதுவரையில் 54 போராட்டங்களை நடத்தி விட்டோம். ஆனால் சரி செய்யப்பட வில்லை. இதனால் அரசாணை எரிப்பு போராட்டம் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இன்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஊதிய முரண்பாட்டை சரி செய்யும்வரை சிறை நிரப்ப தயாராக உள்ளோம். கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #teachers #teachersarrest

    Next Story
    ×