என் மலர்
செய்திகள்

கடலூர்- விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை: மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
கடலூர்:
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறுவதால் கடலூர், விழுப்புரம் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் 2 நாட்கள் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சூறைகாற்றுடன் பலத்த மழை பெய்தது. கடலூர், ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, விருத்தாசலம் போன்ற பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. காட்டுமன்னார் கோவிலில் அதிக மழை பெய்தது.
ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான கள்ளிப்பாடி, காவனூர், தேத்தாம்பட்டு, புதுக்குப்பம், மதகளிர் மாணிக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதைத்தொடர்ந்து ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வாக்காரமாரி பகுதியில் குன்னத்து ஏரி முற்றிலும் நிரம்பியது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இன்று காலையிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. கடலூர் நகரிலும் மழை தூறிக்கொண்டே இருந்தது.
கடலூர் தேவனாம்பட்டிணம், தாழங்குடா உள்ளிட்ட கடலோர கிராமங்களில் நேற்று மாலை கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. அலைகள் ஆக்ரோஷத்துடன் பொங்கி எழுந்தன. சுமார் 5 அடி உயரத்துக்கு அலைகள் சீறி பாய்ந்தன.
இதையடுத்து மீனவர்கள் கரையோரம் நிறுத்திவைத்திருந்த தங்களது பைபர் படகு மற்றும் கட்டுமரம், மீன்பிடி வலைகள் ஆகியவற்றை மேடான இடத்துக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர். கடல் கொந்தளிப்பு மற்றும் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று மாலை பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்தது. நள்ளிரவுவரை மழை தூறிக்கொண்டே இருந்தது. இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
காலை 9 மணி அளவில் மரக்காணம், அனுமந்தை, கூனிமேடு, கீழ்புத்துப்பட்டு, பிரம்மதேசம் போன்ற இடங்களில் பலத்த மழை பெய்தது. 1 மணி நேரம் பெய்த மழையால் ரோட்டில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.
விழுப்புரம் மாவட்டத்தில் 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இன்றும் கடல் பகுதியில் சீற்றமும், கொந்தளிப்பும் அதிக அளவு காணப்பட்டது. இதனால் வசன்குப்பம், கைப்பானிக்குப்பம், எக்கியார்குப்பம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று 2-வது நாளாக மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வில்லை. இதனால் படகுகள் அனைத்தும் கடற்கரையோரம் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. #rain #fishermen