search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன்- என்ஆர் தனபாலன்
    X

    பெரம்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன்- என்ஆர் தனபாலன்

    கடந்த தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டது போல் இந்த இடைத்தேர்தலிலும் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்று என்.ஆர். தனபால் தெரிவித்தார். #DMK #NRDhanapalan
    சென்னை:

    2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது பெரம்பூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வெற்றிவேல் 79,974 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

    இவரை எதிர்த்து தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் 79,455 வாக்குகள் பெற்றிருந்தார். அதாவது 519 வாக்கு வித்தியாசத்தில் என்.ஆர்.தனபாலன் தோல்வி அடைந்திருந்தார்.

    இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் மனு கொடுத்ததால் 18 பேரின் எம்.எல்.ஏ. பதவியை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து விட்டார்.

    இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சபாநாயகர் அறிவித்த தகுதி நீக்க உத்தரவு செல்லும் என்று கூறி விட்டனர். தற்போது 18 தொகுதிகளும் காலியான தொகுதியாக உள்ளது.

    இந்த தொகுதிகளுடன் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி என 20 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே போட்டியிட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

    அந்த வகையில் பெரம்பூர் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு 519 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் மீண்டும் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுவார் என தெரிகிறது.

    இதுபற்றி என்.ஆர்.தனபாலனிடம் ‘மாலைமலர்’ நிருபர் கேட்டபோது அவர் கூறியதாவது:-


    கடந்த தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டேன். இந்த இடைத்தேர்தலிலும் கண்டிப்பாக போட்டியிடுவேன்.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ‘சீட்’ கேட்பேன். தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை அறிவித்த பிறகுதான் இது குறித்து பேச முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஆம்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில் அ.தி.மு.க.விடம் தோற்றது. இதற்கிடையே அத்தொகுதி எம்.எல்.ஏ. தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    ஆம்பூர் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி மீண்டும் போட்டியிடுமா? என்று அக்கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    இடைத்தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேதி அறிவிக்கப்பட்டவுடன் ஆம்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து தி.மு.க.விடம் கேட்பது பற்றி தலைமை நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார். #DMK #NRDhanapalan
    Next Story
    ×