என் மலர்
செய்திகள்

கோயம்பேடு பஸ்நிலையம் அருகே வாலிபர் அடித்து கொலை
போரூர்:
கோயம்பேடு பஸ்நிலையம் அருகே வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் கிடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து கோயம்பேடு போலீஸ் உதவி கமிஷனர் ஜான்சுந்தர், இன்ஸ்பெக்டர் ராஜகுமார் ஆகியோர் அங்கு சென்றனர். கோயம்பேடு பஸ்நிலையம் நுழைவு வாயில் அருகே உள்ள ஒரு ஓட்டலின் பின்புறம் உள்ள காலி இடத்தில் அந்த வாலிபர் கிடந்தார்.
அருகில் சென்று பார்த்த போது 35 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபர் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். அவரை யாரோ கொலை செய்து அங்கு போட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
வாலிபரின் தலை, கழுத்து ஆகிய இடங்களில் ரத்த காயம் உள்ளது. எனவே, அவரை மர்ம கும்பல் கல்லால் அடித்து கொடூர மாக கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது.
அதிகாலை 3 மணி அளவில் இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என்று தெரிகிறது. இறந்த வாலிபர் யார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
வாலிபர் உடல் மருத்துவ பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இரவிலும் மக்கள் நடமாட்டம் உள்ள கோயம்பேடு போலீஸ் நிலையம் அருகிலேயே இந்த கொலை நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.