search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாமிரபரணி புஷ்கரத்தை அரசு விழாவாக நடத்த வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்
    X

    தாமிரபரணி புஷ்கரத்தை அரசு விழாவாக நடத்த வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்

    தைப்பூச மண்டபம், குறுக்குத்துறையில் தடையை நீக்கி தாமிரபரணி புஷ்கரத்தை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்று நெல்லையில் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #BJP #TamilisaiSoundararajan #ThamirabaraniPushkaram
    நெல்லை:

    காந்தி, லால்பகதூர் சாஸ்திரி பிறந்த நாள், காமராஜர் நினைவு நாள் மற்றும் புஷ்கர விழாவை முன்னிட்டு பா.ஜ.க. சார்பாக நெல்லை சந்திப்பு தைப்பூச மண்டபம் அருகே தாமிரபரணி கரையோரம் தூய்மை படுத்தும் பணி இன்று நடைபெற்றது. இதனை மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து தைப்பூச மண்டபத்தை சுற்றி பார்த்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தாமிரபரணி மகா புஷ்கர விழா 144 ஆண்டுகளுக்கு பிறகு கொண்டாடப்பட இருக்கிறது. எனவே இதை சிறப்பாக நடத்த இந்து சமய மடாதிபதிகளும், சமய வல்லுனர்களும் முயற்சி எடுத்து வருகின்றனர். பிரதமர் மோடி விருச்சிக ராசியில் பிறந்தார்.

    எனவே இந்த ராசியில் வரும் தாமிரபரணி புஷ்கரத்தை சிறப்பாக கொண்டாட பா.ஜ.க. சார்பாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தைப்பூச மண்டபம் மற்றும் குறுக்குத்துறை ஆகியவற்றில் புஷ்கர விழா நடத்த பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு தடை விதித்துள்ளது.

    ஆனால் இங்கு தடை செய்வதற்கான காரணம் எதுவும் இல்லை. இது பலம் வாய்ந்த மண்டபமாக உள்ளது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து கொள்ளலாம். சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த பகுதியில் மட்டும் நீராடலாம். இது ஆன்மீக விழா.

    இந்த விழாவுடன் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் பலியான சம்பவத்தை ஒப்பிட்டு பேசுவது தவறு.

    விழா தொடங்க சில நாட்களே உள்ளது. அரசு இதுவரை எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை. எனவே இந்த பகுதியில் சுத்தப்படுத்தும் பணியை நாங்களே தொடங்கியுள்ளோம்.

    மாநில அரசு சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும். இதுபோல சிறப்பு ரெயில், விமானங்களை இயக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அரசு உடனடியாக தைப்பூச மண்டபம், குறுக்குத்துறையில் விழா கொண்டாட விதித்த தடையை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும். மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் புஷ்கர விழாவை மாநில அரசே நடத்தியது. எனவே இதை அரசு விழாவாக நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #TamilisaiSoundararajan #ThamirabaraniPushkaram

    Next Story
    ×