search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை கோவிலுக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு மதுரை ஆதீனம் வரவேற்பு
    X

    சபரிமலை கோவிலுக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு மதுரை ஆதீனம் வரவேற்பு

    சபரிமலை கோவிலுக்கு செல்ல பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு கூறியுள்ளது. இதனை வரவேற்பதாக மதுரை ஆதீனம் கூறியுள்ளார். #Sabarimala #SabarimalaVerdict #MaduraiAdheenam
    மதுரை:

    சபரிமலை கோவிலுக்கு செல்ல பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு குறித்து மதுரை ஆதீனம் இன்று ‘‘மாலை மலர்’’ நிருபரிடம் கூறியதாவது:-

    சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று வழங்கிய தீர்ப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். கடந்த 1½ ஆண்டுக்கு முன்பே இப்படித்தான் தீர்ப்பு வரும் என்று சொல்லியிருக்கிறோம்.

    இந்த தீர்ப்பின் மூலம் பெண்கள் ஆண்களுக்கு சமம். பெண்கள் கடவுளாக வழிபடக்கூடியவர்கள். ஆண்களும், பெண்களும் சம உரிமை பெற்றவர்கள் என்பது நிரூபணமாகி உள்ளது.

    எனவே பெண்களை அனைவரும் மதிக்க வேண்டும். பெண்கள்தான் இந்த சமுதாயத்தை படைக்கிறார்கள் என்ற உண்மை உறுதியாகி உள்ளது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் கடந்த 1½ ஆண்டு காலமாக ஆராய்ந்து, அறிந்து பல கட்டமாக விசாரணை செய்து, கேரள அரசு மற்றும் தேவசம் போர்டு கருத்தையும் கேட்டு இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள்.


    சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. நியாயமான தீர்ப்பை வரவேற்கிறேன். நல்ல தீர்ப்பை வழங்கியுள்ள நீதிபதிகளை மனதார பாராட்டுகிறேன்.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு இந்தியாவில் உள்ள பெண்கள் சமுதாயத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இதன் மூலம் பெண்கள் ஆண்களுக்கு சமம் என்ற உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது.

    33 சதவீத உரிமைகள் சலுகைகள், பெண்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் நாடு முழுவதும் நிச்சயம் நிறைவேறும். இந்த தீர்ப்புக்கு கேரள அரசும், தேவசம் போர்டும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #Sabarimala #SabarimalaVerdict #MaduraiAdheenam
    Next Story
    ×