search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜேந்திர சோழன் நிறுவிய பச்சை மரகத அம்மாள் சிலை மாயம் - ஐகோர்ட்டு நோட்டீசு
    X

    ராஜேந்திர சோழன் நிறுவிய பச்சை மரகத அம்மாள் சிலை மாயம் - ஐகோர்ட்டு நோட்டீசு

    ராஜேந்திர சோழன் நிறுவிய பச்சை மரகத அம்மாள் சிலை மாயமான சம்பவம் தொடர்பாக குறித்து போலீஸ் பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது. #Statuemissing

    சென்னை:

    திருச்சியை சேர்ந்தவர் எம்.ஆனந்த் மோகன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் என்ற ஊரில் ஹகோகரணேஸ்வரர்-பிரஹதம்பாள் திருக்கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரசோழன், 3 அடி உயரம் கொண்ட பச்சை மரகத கல்லால் ஆன ஸ்ரீ பிரகதம்பாள் சாமி சிலை செய்து, இந்த கோவிலில் வைத்தார்.

    பின்னர், புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட ஸ்ரீ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான், இந்த சிலையை எடுத்து விட்டு, அதற்கு பதில் கிரானைட் கற்களால் ஆன மாற்றுச் சிலையை செய்து கோவிலில் வைத்து விட்டார்.

    அதேநேரம், அந்த பச்சை மரகத சிலையை திருச்சியில் உள்ள தொண்டைமான் அரசுகளுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில், ஒரு இடத்தில் புதைத்து வைத்தார். இந்த நிலையில், அந்த விலை மதிக்க முடியாத பச்சை மரகத சிலை, பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு விட்டது. அந்த சிலை புதைக்கப்பட்ட நிலம், தற்போது கார்த்திக் தொண்டைமானுக்கு சொந்தமானதாக உள்ளது.


    எனவே, மாயமான சிலை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசிடம் கடந்த 2013ம் ஆண்டு 2 முறையும், கடந்த ஜூன் மாதமும் புகார் செய்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே, என் புகார் மீது வழக்குப்பதிவு செய்து, விலை மதிக்க முடியாத பச்சை மரகத சாமி சிலையை மீட்கும்படி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கோபால கிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார்.

    இதையடுத்து, இந்த மனுவுக்கு சிலைக் கடத்தல் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் வருகிற 20ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

    Next Story
    ×