search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமானத்தில் சோபியா முழக்கமிட்டது தவறு- அமைச்சர் ஜெயக்குமார்
    X

    விமானத்தில் சோபியா முழக்கமிட்டது தவறு- அமைச்சர் ஜெயக்குமார்

    விமானத்தில் பாஜக தலைவர் தமிழிசையைப் பார்த்து சோபியா முழக்கமிட்டது தவறு என்றும், இதுபோன்ற செயல்பாடுகளை ஏற்க முடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #Shphia #MinisterJayakumar
    சென்னை:

    தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் நேற்று பயணம் செய்தார். அவரைப் பார்த்ததும் சோபியா என்ற பெண், பாசிச பாஜக ஆட்சி ஒழிக என கோஷமிட்டார். இதையடுத்து, தமிழிசைக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சோபியா தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென தமிழிசை வலியுறுத்தினார். ஆனால் சோபியா மறுத்துவிட்டார்.



    இதையடுத்து தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில் சோபியாவை போலீசார் கைது செய்தனர். தமிழிசை சவுந்தரராஜனின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டனர். சிலர் மட்டுமே சோபியாவின் செயலை கண்டித்தனர்.



    இந்த சம்பவம் குறித்து தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

    ஜனநாயக ரீதியில் யார் வேண்டுமானாலும் போராடலாம். ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை யாரும் எதிர்க்கப்போவதில்லை. அதே நேரத்தில் எல்லாவற்றிற்கும் இடம், பொருள், ஏவல் ஒன்று உள்ளது. விமானத்திலோ விமான நிலையத்திலோ ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுவதை ஏற்க முடியாது.

    கருத்து சுதந்திரம் உள்ளது என்பதால், விமானத்திற்குள் சோபியா கோஷமிடலாமா? விளம்பரத்திற்காக இதுபோன்று சிலர் கோஷமிடுகின்றனர். இப்படி கோஷமிடுவதை அனுமதித்தால், விமான நிலையத்திற்கு செல்லும் தலைவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும்.

    கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இதுபோன்று பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேடை அமைத்து தங்கள் கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்தலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Shphia #MinisterJayakumar
    Next Story
    ×