search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு கால்நடை டாக்டர்கள் குழு- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
    X

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு கால்நடை டாக்டர்கள் குழு- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

    கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு டாக்டர்கள் குழு விரைவில் சென்று பணிகள் மேற்கொள்ளும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணையில் கலெக்டர் டாக்டர். கே.எஸ். பழனிசாமி, தலைமையில் கால்நடை பரமாரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது,

    அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதனால் அமராவதி அணைக்கு வரப்பெறும் நீரின் அளவு வினாடிக்கு 16,233 கன அடியாக உள்ளது. எனவே அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 15,400 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதனால் உடுமலை வட்டத்தில் ஆற்றின் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள கல்லாபுரம், எலையமுத்தூர் மற்றும் கொழுமம் ஆற்றோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்காக கல்லாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி , ராஜேஸ்வரி திருமண மண்டபம் கொழுமம் மற்றும் கொழுமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இம்முகாம் மூலம் பொது மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு, மின்சாரம், கழிப்பறை மற்றும் மருத்துவம் போன்ற சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் வெள்ள அபாயம் உள்ள தாழ்வான பகுதிகளில் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கரையோர பகுதியில் உள்ள பொது மக்களிடம் வெள்ள அபாய எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறையினரால் பொது மக்களிடம் வெள்ள அபாய எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் மண்டல துணை வட்டாட்சியர் தலைமையில் 24 மணி நேரமும் தொடர்கண்காணிப்பு பணியில் களப்பணியாளர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் திருப்பூர் மாவட்டத்தின் வெள்ள அபாய பகுதிகளை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    மேலும், தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆணையின் படி, கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10 மாவட்டங்களுக்கு கால்நடைகளுக்கு தேவையான தீவனம் மற்றும் மருந்துகள் மற்றும் கால்நடைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள இணை இயக்குநர் தலைமையில் 25 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டு விரைவில் அக்குழுவினர் அங்கு சென்று மருத்துவபணியினை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அசோகன், அமராவதி அணையின் செயற்பொறியாளர் தர்மலிங்கம், உதவி பொறியாளர் சரவணன், குடிமைப் பொருள் வட்டாட்சியர் தயானந்தன், மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×