search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 வழிச்சாலைக்கு ஆதரவு - ரஜினிக்கு கமல் மீண்டும் எதிர்ப்பு
    X

    8 வழிச்சாலைக்கு ஆதரவு - ரஜினிக்கு கமல் மீண்டும் எதிர்ப்பு

    நடிகர் ரஜினிகாந்தின் 8 வழிச்சாலை குறித்த ஆதரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மக்கள் நீதிமய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன், புதிய சாலையை மக்கள் யாராவது கேட்டார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். #ChennaiSalemExpressWay
    சென்னை:

    தமிழக அரசியல் களத்தில் ரஜினியும், கமலும் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் நீதிமய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை கமல் தொடங்கிவிட்ட நிலையில் ரஜினியோ புதிய கட்சியின் பெயரை இன்னும் அறிவிக்காமலேயே உள்ளார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி தனது கட்சியின் பெயரை ரஜினி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சினிமாவை போல அரசியல் பயணத்திலும் இருவருக்கும் தனித்தனி பாதைகளில் பயணித்து வருகிறார்கள். 2 பேரின் பேச்சுக்களும், செயல்பாடுகளும் நேர் எதிராகவே உள்ளன.

    மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கமல் வரிந்து கட்டிக்கொண்டு கருத்துக்களை கூறிவரும் நிலையில் ரஜினியோ அந்த வி‌ஷயத்தில் மென்மையான போக்கையே கடைபிடித்து வருகிறார்.

    ஸ்டெர்லைட் போராட்டத்தில் தொடங்கி சேலம்-சென்னை 8 வழிச்சாலை விவகாரம் வரையில் ரஜினி-கமல் இருவரும் மாறுபட்ட கருத்துக்களையே கூறிக் கொள்கிறார்கள்.

    ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலவரம் வெடிப்பதற்கு சமூக விரோதிகளே காரணம் என்று ரஜினி குற்றம் சாட்டியது பற்றி கருத்து தெரிவித்த கமல், போராடுபவர்கல் எல்லாம் சமூக விரோதிகள் என்றால் நானும் சமூக விரோதிதான் என்று ஆவேசப்பட்டார்.

    தமிழக அரசின் மீது கமல் தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறி வரும் நிலையில் ரஜினியோ அதுபற்றி வாய்திறப்பதே இல்லை. அதற்கு மாறாக பாராட்டுக்களையே தெரிவித்து வருகிறார். தமிழகத்தில் ஊழல் நிறைந்திருப்பதாக அமித்ஷா கூறிய குற்றச்சாட்டு பற்றிய கேள்விக்கு கூட ரஜினி பதில் அளிக்கவில்லை.

    ஆனால் அமைச்சர் செங்கோட்டையன் கல்வி துறையில் சிறப்பாக பணியாற்றி வருகிறார் என்று வெளிப்படையாக பாராட்டினார். சேலம்- சென்னை 8 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்தார்.

    விவசாயிகளை பாதிக்காத வகையில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறிய ரஜினி, 8 வழிச்சாலை போன்ற பெரிய திட்டங்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு மிகவும் அவசியமானது என்றும் கூறினார்.

    மத்திய அரசின் இந்த கருத்துக்கு ஏற்கனவே அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ‘‘சினிமா நடிகரான ரஜினிக்கு என்ன தெரியும்’’ என்று அவர் கேள்வி எழுப்பினர்.

    இந்த நிலையில் 8 வழிச்சாலை குறித்த ரஜினியின் கருத்துக்கு கமலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த சாலையை ரஜினி வரவேற்பது பற்றி கமலிடம் கருத்து கேட்டபோது ரஜினியின் கருத்தை கடுமையாக எதிர்த்தார்.

    இதுதொடர்பாக கமல் அளித்த பேட்டியில், 8 வழிச்சாலையால் எங்கள் வாழ்க்கை தரம் தாமதப்பட்டு இருப்பதாக கூறி புதிய சாலையை மக்கள் யாராவது கேட்டார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    சேலம்-சென்னைக்கு இடையே இந்த ஒரு வழிதான் உள்ளதா? வெவ்வேறு பாதைகள் இருக்கிறன. இதைவிட குறைந்த செலவில் அந்த சாலைகளை விரைந்து முடிக்கவும் வழிகள் உள்ளன. 8 வழிச்சாலை பற்றி அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அவற்றையெல்லாம் கேட்பதில்லை என்றும் கூறினார்.

    எந்த வி‌ஷயமாக இருந்தாலும் இப்படித்தான், இதுதான் என்று மக்களை வற்புறுத்தக் கூடாது என்றும் கமல் கூறி இருக்கிறார். ரஜினிக்கு எதிரான கமலின் இந்த கருத்துக்கு 2 பேருக்கும் இடையேயான மோதலை மேலும் வலுவாக்கி உள்ளது. #ChennaiSalemExpressWay #KamalHaasan #Rajinikanth #MakkalNeedhiMaiam
    Next Story
    ×