search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் எங்கு ஆய்வுக்கு சென்றாலும் கருப்பு கொடி காட்டுவோம்- முத்தரசன்
    X

    கவர்னர் எங்கு ஆய்வுக்கு சென்றாலும் கருப்பு கொடி காட்டுவோம்- முத்தரசன்

    கவர்னர் இனி எங்கு ஆய்வுக்கு சென்றாலும், தனது தலைமையில் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்துவோம் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு. ஆனால் ஆணையத்துக்கு எதிராக கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேசி வருகிறார். இவர்களது சூழ்ச்சி வலையில் கர்நாடக முதல்வர் சிக்கி கொள்ள கூடாது. உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.

    தூத்துக்குடியில் கடந்த மே 22-ம் தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடி நடந்ததை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டதாக சட்டமன்றத்தில் முதல்வர் கூறியிருக்கிறார். அப்படியென்றால் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடக்கிறதா. துப்பாக்கி சூட்டுக்கு ஆளுநர் உத்தரவிட்டாரா என முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்.

    மாவட்ட கலெக்டர், காவல் கண்காணிப்பாளர் உட்பட துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கி சூடுக்கு உத்தரவிட முடியாது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை. தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையின் அடியாட்களாக காவல்துறையை பயன்படுத்தி உள்ளது.

    சம்பவம் நடந்து முடிந்த பின்னர் சில குறிப்பிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்களை காவல் துறையினர் கைது செய்வதும், வீடுகளுக்கு சென்று பெண்களை அச்சுறுத்துவதும் தொடர்ச்சியாக நடந்து வருவது மீண்டும் பதற்றம் உருவாக்க அரசு முயன்று வருகிறது. மக்கள் அதிகாரத்தை சேர்ந்த வக்கீல் வாஞ்சிநாதன் கைது செய்யப்பட்டு, அவர் வாக்குமூலம் கொடுத்ததாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது ஜோடிக்கப்பட்ட வழக்கு. ஸ்டெர்லைட் ஆலை மூடியதால், வேலை வாய்ப்பு இழந்தவர்களுக்கு மாற்று வேலை அளிக்க வேண்டியது அரசின் கடமை.

    இந்த பிரச்சனை குறித்து மக்களுக்கு உண்மை நிலை தெரிய வேண்டும் என்றால் உயர்நீதிமன்ற கண்காணிப்போடு சி.பி.ஐ. விசாரணை நடக்க வேண்டும். கைது நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அப்பாவி மக்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

    சேலம் - சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்தில் பாதிக்கப்படுகிற விவசாயிகளிடம், பொதுமக்களிடம் கருத்துகளை அறிந்து நடவடிக்கை எடுக்க கூறி வருகிறோம். ஆனால் வருவாய்த்துறை, காவல் துறை மூலமாக அரசு பலவந்தமாக கருங்கல் நடும் பணி நடத்துகிறது. இது மத்திய அரசின் திட்டம். எங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை என கூறுவது மாநில முதல்வருக்கு அழகல்ல. இந்த 8 வழி சாலையை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் கிட்டத்தட்ட அறிவிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனம் அமல்படுத்துவது போல் காணப்படுகிறது. இதனை கண்டித்து சென்னையில் நாளை உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதில் அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.


    தமிழகத்தில் மாநில சுயாட்சிக்கு எதிராக கவர்னர் பன்வாரிலால் புரோகித் செயல்படுகிறார். அவர், முதல் அமைச்சருக்கு தெரிவிக்காமலேயே, தலைமை செயலாளர் மூலம் பயண திட்டத்தை வகுத்து கொண்டு பல்வேறு ஊர்களிலும் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

    கவர்னருக்கு கருப்புக் கொடி காட்டினால், 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மிரட்டுகிறார்கள். கவர்னர் இனி எங்கு ஆய்வுக்கு சென்றாலும், எனது (முத்தரசன்) தலைமையில் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Mutharasan #TNGovernor #BanwarilalPurohit
    Next Story
    ×