search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி அரசு ஆஸ்பத்திரி சுற்றுச்சுவரில் திடீர் விரிசல் - நோயாளிகள் பீதி
    X

    ஊட்டி அரசு ஆஸ்பத்திரி சுற்றுச்சுவரில் திடீர் விரிசல் - நோயாளிகள் பீதி

    ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியின் சுற்றுச்சுவரில் திடீரென்று விரிசல் ஏற்பட்டு உள்ளதால் நோயாளிகள் பீதி அடைந்து உள்ளனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நகராட்சி அலுவலகம் அருகே அரசு தலைமை ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரி ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இருந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சை, பொது சுகாதாரம், அறுவை சிகிச்சை மற்றும் பிரசவம், கண் மருத்துவம், காது, மூக்கு தொண்டை, எலும்பு முறிவு உள்பட மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    ஆஸ்பத்திரியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய கட்டிடங்கள் தற்போதும் பொலிவுடனும், வலிமையுடனும் காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவுக்கு செல்லும் நுழைவுவாயில் பகுதியில் உள்ள சுற்றுச்சுவரில் திடீரென விரிசல் ஏற்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக விரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரிசல் ஏற்பட்ட பகுதியை தற்காலிகமாக சிமெண்டு பூசி சரிசெய்ய நடவடிக்கை எடுத்தனர். ஆனால், மீண்டும் அந்த சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.

    இதனால் தினமும் ஆஸ்பத்திரிக்கு வந்து செல்லும் பொதுமக்கள் விரிசல் ஏற்பட்ட பகுதியை பார்த்துக்கொண்டே செல்கிறார்கள். அந்த பகுதியை விரைவில் கடந்து செல்ல வேண்டும் என்று வேகமாக செல்வதை காண முடிகிறது. எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் அந்த சுவர் வாயை பிளந்து இருக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் ஆஸ்பத்திரிக்கு வந்து செல்லும் நோயாளிகள் பீதி அடைந்து உள்ளனர். இதுகுறித்து ஊட்டி நகர பொதுமக்கள் கூறியதாவது:-

    ஊட்டியில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆங்காங்கே சாலையோரங்களில் மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன. இந்த நிலையில் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியின் சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டு இருப்பது மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மழை தீவிரம் அடையும் முன்பு விரிசல் ஏற்பட்ட சுற்றுச்சுவரை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசு பள்ளி சுற்றுச்சுவர்கள் மற்றும் நடைபாதை ஓரங்களில் உள்ள விரிசல் ஏற்பட்ட சுவர்களை முன் எச்சரிக்கையாக பாதுகாக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×