search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது
    X

    டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது

    டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் நேற்று காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். ஆனாலும் நேற்று ஏராளமான லாரிகள் வழக்கம்போல ஓடின.
    சென்னை:

    தினசரி டீசல் விலை உயர்வு, 3-ம் நபர் காப்பீட்டு தொகை கட்டணம் 30 சதவீதம் அதிகரிப்பு, சுங்க கட்டணம் ஆண்டுதோறும் உயர்வு போன்றவற்றை வாபஸ் பெற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என பிரதமர் மற்றும் போக்குவரத்து-பெட்ரோலியத்துறை மத்திய மந்திரிகளுக்கு அகில இந்திய தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் கடந்த ஏப்ரல் 23-ந்தேதி ‘நோட்டீசு’ வழங்கியது.

    அதன்படி லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. இதையடுத்து நகரில் ஏராளமான லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. சென்னையில் கோயம்பேடு, மாதவரம், வானகரம், நெற்குன்றம் உள்ளிட்ட பல இடங்களில் லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. லாரிகள் இயங்காத காரணத்தால் டிரைவர்கள் மற்றும் பணியாளர்கள் லாரிகளிலேயே உணவு சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.

    லாரி உரிமையாளர்கள் போராட்டத்தால் தினசரி மத்திய அரசுக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அகில இந்திய தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.ராஜேந்தர் சிங், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.சுகுமார் ஆகியோர் கூறியதாவது:-

    லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் பங்கேற்க உள்ளன. தமிழகத்தில் முதற்கட்டமாக 2 லட்சம் லாரிகள் போராட்டத்தில் குதித்துள்ளன. இந்த எண்ணிக்கை ஓரிரு நாட்களில் 5 லட்சத்தை தாண்டிவிடும். இதுதவிர வெளிமாநில லாரிகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. இதனால் மத்திய அரசுக்கு ஒரு நாளைக்கு ரூ.5 ஆயிரம் கோடியும், தமிழகத்தில் ரூ.50 கோடியும் இழப்பு ஏற்படும். லாரி உரிமையாளர்களுக்கு ரூ.10 கோடி இழப்பு ஏற்படும்.

    இது முறையாக, முன்கூட்டியே நோட்டீசு வழங்கி நடத்தப்படும் போராட்டம் ஆகும். இந்த போராட்டத்தை திசை திருப்பும் முயற்சியாக வேறு போராட்ட தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது ஒட்டுமொத்த லாரி உரிமையாளர்கள் மற்றும் மக்கள் பிரச்சினை. எனவே இதில் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டும். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி செல்லும் சரக்கு லாரிகளும் எங்கள் போராட்டத்தில் கைகோர்க்க உள்ளன. எனவே மக்கள் பாதிப்பை கருத்தில்கொண்டு நியாயமான எங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற போராட்டம் நேற்று அறிவிக்கப்பட்டாலும், நேற்று ஏராளமான லாரிகள் வழக்கம்போல ஓடின. சென்னையில் நேற்று லாரிகள் செல்வதை பார்க்க முடிந்தது. இதுகுறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறியதாவது:-

    தமிழகத்தில் பெரும்பாலான லாரிகள் வழக்கம்போலவே இயக்கப்பட்டு வருகின்றன. போராட்டத்தை முதலில் அறிவித்ததே அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட்டு காங்கிரஸ் அமைப்பு தான். அதன் அங்கீகாரம் பெற்ற தலைவர்கள் தான் குமாரசாமி, சண்முகப்பா, கோபால் நாயுடு போன்றவர்கள். இந்த கூட்டமைப்பில் 129 சங்கங்களும், 6 மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் அங்கம் வகிக்கிறது. எனவே திட்டமிட்டப்படி ஜூலை 20-ந்தேதி போராட்டத்தில் களமிறங்குவோம். கோரிக்கைகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் அரசுக்கு உரிய கால அவகாசமும் அளித்திருக்கிறோம். போராட்டத்தை திசை திருப்புவது எங்கள் நோக்கமல்ல, சிக்கலான சூழ்நிலையை அரசுக்கு அளித்திட கூடாது என்பதுதான்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×