search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் உத்தரவிட்டாலும் எங்களை கேட்காமல் பதில் அனுப்பக்கூடாது - அதிகாரிகளுக்கு நாராயணசாமி எச்சரிக்கை
    X

    கவர்னர் உத்தரவிட்டாலும் எங்களை கேட்காமல் பதில் அனுப்பக்கூடாது - அதிகாரிகளுக்கு நாராயணசாமி எச்சரிக்கை

    கவர்னர் உத்தரவிட்டாலும் அமைச்சர்களை கேட்காமல் பதில் அனுப்பக்கூடாது என்று அதிகாரிகளுக்கு நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். #Narayanasamy

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு துறைகளுக்கான இணை செயலாளரை நேரடியாக துறைகளுக்கு நியமிக்க நேற்றைய தினம் ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது.

    துறை இணை செயலாளர் பதவிக்கு ஐ.ஏ.எஸ். தகுதி பெற்றவர்கள், பதவி உயர்வு மூலம் பல கட்டங்களில் பணியாற்றிய பிறகு இணை செயலாளராவது வழக்கம்.

    ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்றவர்கள் 20 ஆண்டுக்கு பின்னரே இணை செயலாளர் பதவியை அடைய முடியும். ஆனால், மத்திய அரசு வெளிமார்க்கெட்டிலிருந்து நேரடியாக இணை செயலாளர் பதவிக்கு நியமிக்க முடிவு செய்திருப்பது நிர்வாகத்தை சீர்குலைக்க செய்யும். அதிகாரிகளின் பாரம்பரியத்தையும் அழிப்பதாக அமையும்.

    ஏற்கனவே மத்திய அரசு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றவர்கள் பயிற்சி பெறும் காலத்தில் பெறும் மதிப்பெண்ணையும் கணக்கிட்டு பணிகளை ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது.

    இதற்கு நாடு முழுவதும் உள்ள முதல்-அமைச்சர்களும், அதிகாரிகளும், மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இணை செயலாளர் பதவியில் இருப்பவர்கள் முதல்-அமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் கோப்புகளை அனுப்பும் நிலையில் இருப்பர். அரசின் கொள்கை முடிவுகள் எடுக்க துணையாக இருப்பர்.

     


    எனவே வெளி மார்க்கெட்டில் இருந்து நேரடியாக நியமனம் செய்வது ஏற்க முடியாதது. மத்திய பா.ஜனதா தொடர்ந்து அரசு அமைப்புகளை சீர்குலைவிற்கு ஆளாக்கும் செயலை செய்து வருகிறது. திட்ட கமி‌ஷனை கலைத்து நிதி அயோக் அமைப்பை ஏற்படுத்தினர்.

    அதேபோல மத்திய அரசின் திட்டங்களை முடக்கம் செய்தனர். சில திட்டங்களுக்கு பெயரை மாற்றி பயன்படுத்தினர். அரசு துறைகளை தங்கள் கட்டுப்பாட்டில் கைப்பாவையாக கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

    சி.பி.ஐ., வங்கிகள், வருவாய்த்துறை ஆகியவற்றை தங்கள் கைக்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் தற்போது இணை செயலாளர் பதவியை நேரடியாக நியமிக்க நினைப்பது மத்திய அரசு விதிமுறைகளுக்கு மீறிய செயல்.

    ஏற்கனவே ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்றவர்கள் பயிற்சியின்போது எடுக்கும் மதிப்பெண்ணையும் கணக்கிடும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். இதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை.

    தற்போது இணை செயலாளர் பதவியை நேரடியாக நியமிக்கவும் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதவுள்ளேன். இத்தகைய நிலைப்பாடு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.எப்.எஸ். மகத்துவத்தை குறைத்துவிடும்.

    வாட்ஸ்-அப், டுவிட்டர் போன்ற சமூகவலை தளங்களில் அதிகாரிகளுக்கு உத்தரவிடுவது ஏற்கத்தக்கதல்ல. அந்த உத்தரவுகளுக்கு அதிகாரிகள் செயல்படக்கூடாது என ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பி இருந்தோம்.

    தற்போது மக்கள் வாட்ஸ்-அப் மூலம் புகார் அளித்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கவர்னர் கூறியுள்ளார். இது ஏற்கத்தக்கதல்ல. கவர்னர் எழுத்துப்பூர்வமாக உத்தரவு அளித்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், துறை செயலர்கள், தலைமை செயலர், அமைச்சர், முதல்- அமைச்சர் ஒப்புதல் பெற்றே கவர்னருக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

    இதுதான் மாநில நிர்வாகத்தில் நடை முறையாக உள்ளது. வாட்ஸ்-அப் அங்கீகரிக்கப்பட்டதல்ல. வாட்ஸ்அப்பில் பல தவறான தகவல்கள், வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. சமீபத்தில் திருபுவனை கூட்டுறவு வங்கியில் கொள்ளை நடந்தததாக தகவல் வெளியானது.

    இதுகுறித்து விசாரித்த போது வங்கி லாக்கரை உடைக்க முடியாமல் திருடர்கள் தப்பி சென்றதாக தகவல் கிடைத்தது. இத்தகைய தகவல்களை யார் அனுப்புகிறார் என கண்டுபிடிக்க முடிய வில்லை. என்னைப்பற்றியும் தவறான தகவல்கள் பரப்புகின்றனர்.

    இதுதொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டால் அமெரிக்காவிற்கு செல்ல வேண்டும் என்கின்றனர். ஏற்கனவே 19 முறை இதுதொடர்பாக கடிதம் மூலமாக கவர்னரிடம் எடுத்துக்கூறியுள்ளேன். கவர்னருக்கு எந்த விளக்கம் அளிக்கும் முன்பும் அமைச்சர்களிடம் ஆலோசனை பெற்றே அதிகாரிகள் விளக்கம் தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளேன். இதை மீறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Narayanasamy

    Next Story
    ×